வார்சா –
கண்களில் பச்சை போட்டுக் கொண்டதால் பார்வையையே இழந்துள்ளார் போலந்தைச் சேர்ந்த 25 வயது மாடல் அழகி ஒருவர். போலந்து நாட்டின் ரோக்லாவ் நகரத்தை சேர்ந்த மாடல் அழகி அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா (25). இவர் போலந்தை சேர்ந்த பிரபல ராப் பாடகரும், குத்து சண்டை வீரருமான போபெக்கின் தீவிர ரசிகை.
எனவே, போபேக் போலவே தனது கண்களிலும் கருமை நிற பச்சை போட்டுக் கொள்ள விரும்பினார் அலெக்சாண்ட்ரா. இதற்காக அவர் முன் அனுபவமில்லாத பச்சைபோடும் நபரை அணுகியுள்ளார். அந்நபரும் பணத்திற்கு ஆசைப்பட்டு தனக்கு கண்களில் பச்சை போடத் தெரியும் என அலெக்சாண்ட்ராவிடம் பொய் சொல்லியுள்ளார்.
இதனால் அலெக்சாண்ட்ராவும் அவரிடம் தனது கண்களில் பச்சை போட்டுக் கொண்டார். ஆனால் பச்சை போட்டது முதலே கண்களில் பயங்கர எரிச்சலையும் வலியையும் அலெக்சாண்ட்ரா உணர்ந்துள்ளார். இது வழக்கமானது தான் சிறிது நேரத்தில் சரியாகி விடும் எனக் கூறி, பச்சை போட்ட நபர் வலி நிவாரணி ஒன்றை அலெக்சாண்ட்ராவிற்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் அலெக்சாண்ட்ரா தனது இடது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்படவே பயந்து போய் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவரது கண்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், முறைப்படி போடப்படாத பச்சையால் அவரது கண்களில் கருமை நிறம் பரவியதைக் கண்டு பிடித்தனர்.
மேலும் அலெக்சாண்ட்ராவின் இடது கண் பார்வையை முற்றிலும் இழந்து விட்ட அதிர்ச்சித் தகவலையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இனி அந்தக் கண்ணில் பார்வையை திரும்ப பெற முடியாது எனக் கூறியுள்ள அவர்கள் விரைவில் வலதுபக்க கண்ணிலும் பார்வையை இழக்க நேரிடும் எனவும் கூறியுள்ளனர்.
கண் போன்ற இடங்களில் டாட்டூ போட்டுக் கொள்ள விரும்புகிறவர்கள் அதற்கு முறையான பயிற்சி பெற்றவர்களை அணுகுவதே சரி. இல்லையென்றால் இது போன்று பார்வையையே இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.