புதிய மொந்தையில் பழைய கள்ளு

புதிய மொந்தையில் பழைய கள்ளு

கோலாலம்பூர், மார்ச் 10-
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான புதிய அமைச்ங்ரவையானது ிபுதிய மொந்தையில் பழைய கள்ளு’ என்று கூறியிருக்கிறார் முன்னாள் துணைப் பிரதமர் டத்தின்ஸ்ரீ டாக்டர் வான் அசீஸா வான் இஸ்மாயில்.
‘Old wine in a new bottle’ என்று இவர் கூறியிருப்பதை இப்படித்தான் நம்ம பாணியில் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது. பளபளப்பான புதிய பாட்டிலை எடுத்து அதில் பழைய கள்ளை ஊற்றிக் கொடுக்கும் வழிமுறையை புதிய அமைச்சரவை தொடர்ந்து செய்யும் என்பதாகவே இவர் கூறியதை எடுத்துக் கொள்ளலாமா?

வான் அசீஸா கூறுவது நூற்றுக்கு நூறு மலேசிய இந்தியர்களின் 19 மாத பக்காத்தான் அரங்சாங்கத்தின் ஆட்சியோடு அழகாகப் பொருந்திப் போகிறது.

இந்தியாவிலிருந்து இங்கு வந்து தஞ்சம் புகுந்த சமயப் பிரச்சாரகர் ஸாகிர் நாயக், மலேசிய இந்தியர்களையும் சீனர்களையும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் செல்லுங்கள் என எக்காளமிட்டபோது அவரை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கண்டிக்கவில்லை. மலேசியர்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் அந்த புண்ணியவானின் செயலை வான் அசீஸா துணைப்பிரதமராக பொறுப்பேற்றிருந்த பக்காத்தான் அரசாங்கம் கண்டு கொள்ளவே இல்லை.

அது ஒரு பழைய கள்ளு சம்பவம்…

மலேசிய தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் விரும்பாத நிலையிலும் அப்போதைய கல்வியமைச்சரால் கட்டாயமாகத் திணிக்கப்பட்ட ஜாவி எழுத்தை வேண்டாம் என்று விலக்கி வைக்க பக்காத்தான் அரசாங்கத்திற்கு பலமில்லாமல் போனது.

அதுவும் பழைய கள்ளுதான்…

மலேசிய பதிவுகள் எப்படி உள்ளன? பதிப்பக செயல்பாடுகள் எப்படி உள்ளன? ஆபாசப் பதிவுகள் கொண்ட நூல்கள் வெளிவருகிறதா? இவைற்றையெல்லாம் கவனிக்க ஆள் இல்லாத அரசாங்கமாக செயல்பட்டதால் மலேசிய மண்ணில் அருவருக்கத்தக்க ஆபாச எழுத்துக்கள் நூல் வடிவில் அச்சேறின. அதை சில ஆன்மிக ஆசாமிகள் தங்கள் பங்குக்கு கொண்டாடி மகிழ்ந்த கொடூரங்கள் அரங்கேறின. இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத அரசாங்கமாக இருந்ததும்…

பழைய கள்ளு விவகாரம்தான்…

தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டது, பொருள் விலையைக் கட்டுப்படுத்தாது, மலேசியர்களின் அடிப்படை மாதாந்திர சம்பள விவகாரத்தை கழுதையின் முதுகில் ஏற்றி காட்டுக்குள் துரத்தி விட்டது போல செயல்பட்டது எல்லாமே

அதரப் பழசான கள்ளுதான்…

இவைகளுக்கு மத்தியிலும்,

முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அமாட், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், எரிசக்தி – அறிவியல் – தொழில்நுட்பம் – சுற்றுச் சூழல் அமைச்சர் இயோ பீ யின், தகவல் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டதாக மக்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.

இவை மட்டும் பழைய மொந்தையின் புதிய கள்ளாகத் தெரிகிறது.

பக்காத்தான் அரசாங்கம் பல்லின மக்களை ஒன்றிணைக்கும் அரசாங்கம் என்பதற்கு சாட்சியாக ஒரே ஒருவர் மட்டும் சளைக்காமல் குரல் கொடுத்து வந்திருக்கிறார் என்றால் அது கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் சமாட் மட்டும்தான்.

பழைய மொந்தையின் அசத்தலானக் கள்ளு இவர் மட்டும்தான்…

மற்றவர்கள் அனைவரும் பதவிக்கு வந்தோமா… மக்களைப் புறக்கணித்தோமா…. பந்தா வாழ்க்கை வாழ்ந்தோமா என்றுதான் இருந்தார்கள் என்பதை யாருமே மறுக்க முடியாது.

கைபேசியில் அழைத்தால் கூட மறுமுனையில் அவர்களின் குரலைக் கேட்பது கடினம் என்ற அளவுக்கு இவர்கள் மலேசிய மக்களின் பிரதிநிதிகள் என்பதையும் கடந்து ஏதோ கண்காணாத தேசத்தின் ராஜபோக எஜமானர்களைப் போலச் செயல்பட்டதுதான் மிச்சம்.

மலேசிய இந்திய சமுதாயம் கண்ட அரசியல் எச்சம்!

வான் அசீஸா சொல்வது உண்மைதான்.

அதே பழைய பக்காத்தான் பாணி கள்ளுதான் புதிய பெரிக்காத்தான் நேஷனல் மொந்தையில் வந்திருக்கிறது.

கடந்த காலத்தில் அதிகமாகப் பகிர்ந்தே போதையானோம்.

இம்முறை நிதானமாகப் பார்ப்போம்…
மறந்தும் அருந்தி விட வேண்டாம்.

மே 18 வரை!

– மு.ஆர்.பாலு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here