ஏப்.18-இல் பெர்சத்து கட்சியின் தேர்தல் மொகிதினுக்காகத் தயாராகிறதா கூரான அரசியல் கத்தி?

மொகிதினுக்காகத் தயாராகிறதா கூரான அரசியல் கத்தி?

கோலாலம்பூர், மார்ச் 12-
ஏப்ரல் 18-ஆம் தேதி நாடு முழுவதுமுள்ள 189 பெர்சத்து கட்சியின் தொகுதிகள் கலந்து கொண்டு வாக்களிக்கப் போகும் அக்கட்சியின் தேர்தலே முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் அடுத்த அரசியல் வியூகமாக் கணிக்கப்படுகிறது.

தனது புதல்வர் டத்தோஸ்ரீ மொக்ரிஸ் மகாதீரை கட்சியின் தலைவராகக் கொண்டு வருவதற்கு துன் மகாதீர் காய் நகர்த்தி வருகிறார் எனவும் பேசப்படுகிறது.

கட்சியின் செயல் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் துன் மகாதீர், மொகிதீன் யாசினை ஓரங்கட்டுவதற்காக தனது புதல்வரை களமிறக்கியிருக்கிறார என கட்சிக்குள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

பக்காத்தான் வீழ்ச்சிக்குப் பிறகு புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் மகாதீர் தோல்வியடைந்தார். சரியான நேரம் பார்த்து மொகிதீன் யாசின் மகாதீருக்கு எதிரான அரசியல் போக்கை செயல்படுத்தினார்.

மார்ச் 1-ஆம் தேதி பிரதமராக பதவியேற்ற மொகிதீன், பெர்சத்துவின் செயல் தலைவராக பொறுப்பேற்றதன் மூலம் பெர்சத்துவை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முயன்றார்.

பிப்ரவரி 24-ம் தேதி மகாதீர் பெர்சத்து கட்சி செயல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார், ஆனால் அவர் அப்பதவியை வகிக்குமாறு கட்சி அவருக்கு உறுதி கொடுத்தபோது, அவர் ஒப்புக்கொண்டார்.

பெர்சத்து கட்சியின் பொதுச்செயலாளர் மர்சுக்கி யஹ்யா பிப்ரவரி 27-ஆம் தேதியன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் டாக்டர் மகாதீர் இன்னும் கட்சியின் செயல் தலைவராக இருப்பதாக அவர் உறுதிப்படுத்தினார். அதனை மொகிதீன் யாசின் நிராகரித்தார் என்பதோடு மர்சீக்கி மீது கட்சி நடைவடிக்கை எடுக்கப் போவதாக செய்திகள் தொடர்ந்து கசிந்த வண்ணம் உள்ளன.

இவையெல்லாம் மகாதீருக்கு, மொகிதீன் யாசின் மீது கோபத்தை அதிகப்படுத்தியிருப்பதால் தனது புதல்வரை கட்சியின் தலைவர் பதவிக்குக் கொண்டு வர நினைக்கிறார்.

தனது ஆதரவை பலப்படுத்திய பிறகு தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னாள் மகாதீர் வேட்புமனுவை மீட்டுக் கொள்ளலாம் எனவும் அதுவரையில் தனது வாக்குகள் முக்ரிசை சென்று சேர்வதற்கு இவர் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு வருவார் எனவும் பேசப்படுகிறது. மார்ச் 23-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here