கொரோனா பீதி: மாட்டு கோமியம் – சாணத்தின் விலை ரூ.500

மாட்டு கோமியம் - சாணத்தின் விலை ரூ.500

புதுடெல்லி, மார்ச் 19-

சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 155-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் இதுவரை 150 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு பயண கட்டுப்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாரதீய ஜனதா தலைவர்கள் தொடர்ந்து கொரோனா நோய் பரவுதல் மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து வினோதமான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வலே மும்பையில் ஒரு ‘கோ கொரோனா கோ’ கோஷத்தை வழிநடத்தினார், இது கொரோனாவை எவ்வாறு அகற்றும் என் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

மேலும், அசாம் பாஜக எம்.எல்.ஏசுமன் ஹரிப்ரியா, மாட்டு கோமியம் மற்றும் சாணத்தை கொரோனா வைரசை குணப்படுத்த உதவக்கூடும் என்று கூறினார். அதே போல் அகில இந்திய இந்து மகாசபா கொரோனாவை தடுக்கும் பொருட்டு டெல்லியில் ஒரு மாட்டு கோமியம் விருந்தை நடத்தியது.

சமீபத்தில் சில அமைப்பினர் கொரோனாவுக்கு மருந்தாக கோமியத்தை கொடுத்தால் சரியாகிவிடும் என்றும் மாட்டுச்சாணத்தை உடலில் பூசிக்கொண்டால் கொரோனா அண்டாது என்றும் கூறினர்.

கொரோனா வைரஸை பயன்படுத்தி ஒரு சிலர் வியாபார தந்திரங்கள் செய்து வருகின்றனர். கொல்கத்தாவை சேர்ந்த மகபூப் அலி இரண்டு மாடுகள் வைத்திருப்பதாகவும் அந்த மாட்டின் கோமியம் மற்றும் மாட்டுச்சாணத்தையும் கொரோனா வைரஸ் பரபரப்பை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் கூறி உள்ளார்.

தனது இரண்டு மாடுகளின் கோமியத்தை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 500-க்கும் மாட்டுச்சாணத்தை கிலோ ரூபாய் 500-க்கும் விற்பனை செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க பலர் தன்னிடம் கோமியம், மாட்டுச்சாணத்தை வாங்கிச் செல்வதாகவும் மாட்டின் பாலில் இருந்து கிடைக்கும் வருமானத்தை விட இதில் பல மடங்கு வருமானம் தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மாட்டு சாணம் மற்றும் கோமியம் கொரோனா வைரஸை குணமாக்கும் என்று எந்த ஆய்வறிக்கையும் கூறாத நிலையில் தற்போது மக்கள் இவ்வாறு வாங்கிச் சென்று கொண்டிருப்பது அவர்களுடைய அறியாமையை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here