ஓட்டுனர் சேவை நாட்டுக்கு தேவை

கோலாலம்பூர்,ஏப்.4-

பெர்லிஸ் மாநிலத்தின் ஆராவ் நகரில் இருந்து 815 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜோகூர் பாரு வரையிலும் கிழக்குக் கரை மாநிலங்களுக்கும் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்து விட்டது.

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தாலும் அவர்களின் அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

காய்கறிகள் முதற்கொண்டு மீன், இறைச்சி வகைகள் என மக்களுக்கு கிடைத்துக் கொண்டே வருகிறது.

காவல், மருத்துவம், மளிகைக் கடை என கட்டுப்பாடின்றி மக்கள் சேவையாற்றுவோர் தொடர்ந்து பாராட்டப்பட்டு வருகிறார்கள்.

அவசர காலத்தின் அவசியமான பணியாளர்கள் என உலகம் இவர்களைப் பாராட்டி வருகிறது. அவசியமான பாராட்டும் கூட, இதனை மறுக்க முடியாது.

ஆனாலும், வீட்டில் இருக்கும் நமக்கு வேண்டிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறது என்றால் உற்பத்திப் பொருட்களை ஏற்றிக் கொண்டு பெரு நகரங்கள் முழுவதும் வினியோகித்து வரும் லோரி ஓட்டுநர்களை நாம் மறந்து விடக்கூடாது.

கோலாம்பூரின் சன் சவ் லின் சாலையிலும் மூராய் சத்து பகுதியிலும் இன்று வரையில் தொய்வின்றி இயங்கி வரும் லோரி ஓட்டுநர்கள் ஒரே நிமிடம் முன் வைத்த காலை பின் வைத்து விட்டால் நமக்கு உணவு கிடைக்காமல் போய்விடும்.

கச்சான் பூத்தே(கடலை வியாபாரம் அல்ல) என்று இவர்கள் செய்யும் வியாபாரம் அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த கச்சான் பூத்தே வியாபாரிகள்தாம் நாடு முழுவதும் பயணித்து பொருட்களை விநியோகம் செய்து வருகிறார்கள்.

சந்தைக்கு நாம் செல்லலாம்.சந்தைக்குள் கறி காய்கள் இருக்காது.

கேமரன் மலையிலிருந்து ஒரு டசனுக்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் இறங்கி வந்தால்தான் நாம் உணவு உண்ண முடியும் என்ற நிலை உள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரும் உணவுப் பொருட்களை வெஸ்ட்போர்ட் துறைமுகத்திலிருந்து ஏற்றிச்செல்ல இவர்கள் முன்வராவிட்டால் உணவுப் பொருட்கள் நம்மையும் மருந்துப் பொருட்கள் மருத்துவமனைகளையும் போய்ச் சேராது.

தன் குடும்பத்தையும் மறந்து, நாட்டு மக்களுக்கு உணவு விநியோகம் சிறப்பாகப் போய்ச் சேர்ந்தாக வேண்டும் என்ற சிந்தனையோடு பணியாற்றி வரும் ஓட்டுநர்களை மனதார சிறப்பிக்க வேண்டிய காலம் இது.

ஒட்டு மொத்த ஓட்டுநர்களும் லோரியை எடுக்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தால் நாடு உண்வுப் பஞ்சத்திற்கு ஆட்பட்டு விடும்.

ஓட்டுநர்களின் சேவை
தொடர்ந்து
நாட்டுக்குத் தேவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here