வடகிள்ளான் போலீஸ் அதிரடி நடவடிக்கை
காப்பார் –
கோவிட் – 19 உயிர்க்கொல்லி நோயால் அரசாங்கம் விதித்திருக்கும் நடமாட்டக் கட்டுப் பாட்டை மீறி செயல்படுபவர்களை வடகிள்ளான் போலீசார் கைது செய்துள்ளனர்.
கிள்ளான் லிந்தாங் பத்து தீகா பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் ஐந்து வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த வேளையில் அதிரடியாக நுழைந்த போலீசார் அவர்களை வளைத்துப் பிடித்ததுடன் கடையின் உரிமையாளரும் பணியாளர் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டனர்.
அவ்வட்டாரத்திலுள்ள வெளிநாட்டாவர்கள் உணவுகள் வாங்குவதற்கு அந்த உணவகத் தையே முற்றுகையிட்டு வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 30 வயதிலிருந்து 40 வயது மதிக்கத்தக்க ஆடவர்கள் நான்கு நாட்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவை பெற்றுள்ளதாக வடகிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நூருல்ஹூடா சாலே குறிப்பிட்டார்.

போலீசார் மேற்கொண்ட ரோந்துப்பணியின்போது மேலும் நால்வர் கைது செய்யப் பட்டனர். மேரு ஜாலான் பைப்பிலிருந்து புக்கிட் செராக்கா செல்லும் பெர்சியாரான் மொக்தார் டஹாரி பகுதியில் போலீசார் ஆள் நடமாட்டத்தைக் குறைக்க ஏற்படுத்தியுள்ள சாலைத் தடுப்பை அகற்றிக் கொண்டிருந்த நேரத்தில் போலீசாரிடம் வசமாக மாட்டிக்கொண்டனர்.
20 வயதிலிருந்து 30 வயது மதிக்கத்தக்க அந்த நால்வரும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் தாமான் அமான் பெர்டானா ஏரிப்பகுதியில் சுற்றித்திரிந்த 8 வெளிநாட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
அப்பகுதி குடியிருப்பாளர்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து போலீசார் அவர்களை வளைத்துப் பிடித்ததாகவும் அவர்கள் அனைவரும் அவ்வட்டாரத்திலுள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் என்றும் விசாரணைக்காகத் தடுத்து வைத்திருப்பதாகவும் ஏசிபி நூருல்ஹூடா தெரிவித்தார்.





























