மலாயன் மேன்சன் – சிலாங்கூர் மேன்சனில் தொடரும் கண்காணிப்பு

கோலாலம்பூர் –

மஸ்ஜிட் இந்தியாவிலுள்ள சிலாங்கூர் மேன்சன், மலாயன் மேன்சன் ஆகிய இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருக்கின்றன.

கட்டடங்களைச் சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து யாரும் வெளியேறவும் உள்ளே செல்வும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குடியிருப்புகளில் வசிக்கும் அந்நியப் பிரஜைகளுள் பலர் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா கூறியிருக்கிறார்.

அங்கு வசிப்போரில் 15 பேருக்குக் கொரோனா தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அங்குள்ள நிலவரங்கள் குறித்து அந்த அந்நியப் பிரஜைகளுக்கு விளக்கமளிக்க 3 நாடுகளின் தூதரகங்களின் உதவிகள் நாடப்பட்டிருக்கின்றன. இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதரகங்களுடன் விரைவில் தொடர்புகொண்டு விளக்கம் அளிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருக்கிறார்.

உருது, தமிழ், வங்காள மொழி தெரிந்தவர்களை அழைத்துவந்து அந்தக் குடியிருப்புகளின் நிலவரம் குறித்து அந்நியப் பிரஜைகளுக்கு விளக்கம் அளிக்கும்படி தூதரகங்களை நாங்கள் கேட்டிருக்கிறோம் என்றார் அவர்.

இதன்மூலம் அந்தக் குடியிருப்பில் ஏற்பட்டுள்ள கிருமித்தொற்று குறித்து அந்த அந்நியப் பிரஜைகளுக்குத் தெளிவான செய்தியைச் சொல்ல முடியும். அவர்கள் ஒத்துழைக்க வேண்டும். இது ஒருவகையான தண்டனை அல்ல. அவர்களுக்கு உதவும் நடவடிக்கை எனவும் அமைச்சர் அனுவார் கூறியிருக்கின்றார்.

அங்கு வசிக்கும் அந்நியப் பிரஜைகள் பயப்படத் தேவையில்லை – கவலைப்படவும் தேவையில்லை. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நபர்கள் தப்பிச்சென்று மற்றவர்களுக்கும் அதைப் பரப்பிவிடக்கூடாது என்பதுதான் முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here