வினைக்கு எதிர்வினை இது ஒரு படிப்பினை

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்பார்கள். இதுதான் உண்மை உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.

நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்பார்கள் அதுபோல, கெட்டது செய்தால் கெட்டது நடக்கும் என்பதும் சத்தியமான உண்மைதான்.

திமிர் கொண்டு தப்பு செய்தால்? இப்படிக் கேட்பவர்களும் இருக்கிறார்கள்!
இதற்குப் பதில் சொல்வது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. திமிர் கொண்டு செய்தால் தப்பிக்க முடியாது என்று சொல்லிவிடலாம்.

மக்கள் கூடல் இடைவெளி கட்டுப்பாடு அமலில் இருக்கிறது என்பது இப்போது பரவலாகவே தெரிய ஆரம்பித்துவிட்டது. இந்த கடடுப்பாட்டை மீறீனால் துன்பம் வரும் என்பதும் தெரியும். தெரிந்தும் தப்பு நடக்கிறது என்றால் அதற்குப் பெயர் ஒன்று இருக்கிறது. அதைத் திமிர் என்றும் சிறப்பித்துக் கூறுவார்கள்.

சில சமயங்களில் திமிர் என்பது நல்லதாகவே இருக்கும். பல வேளைகளில் கொம்பு சீவிய காளையாகவும் மாறும். அப்படி மாறும்போது சட்டம் தன் வேலையைக் காட்டும்.
சட்டத்தின் முன் திமிர் பெட்டிப் பாம்பாய் அடங்கிவிடும்.அடங்க மறுத்தால் அடக்கப்படுவார்கள். அடக்கப்படும்போது அதற்கு ஒரு விலை இருக்கிறது.அந்த விலை சிறையாகவும் இருக்கலாம். அபராதமாகவும் இருக்கலாம் அல்லது இரண்டும் சேர்ந்ததாகவும் இருக்கலாம்.

இன்றைய கொரோனா -19 காலத்தில் மக்கள் கூடல் இடைவெளிக் கட்டுப்பாடு சட்டத்தை வகுத்திருக்கிறார்கள். இந்தச் சட்டம் எதற்காக என்றும் தெரியும். தெரிந்திருந்தும் திமிரெடுத்துத் திரிந்தால் அதை என்னவென்பது. அப்படிப்பட்டவர்களை எந்த ரகத்தில் சேர்ப்பது?

சொல்வதை ஏற்க மறுப்பது அவரவர் விருப்பம். ஆனால், அரசு கூறும் வார்த்தை சட்டத்திற்கு உட்பட்டது. சட்டம் என்பது கழற்றிப்போடும் சட்டையல்ல. அசட்டையும் அல்ல. அது ஓர் அங்கி. அதை அணிந்துகொள்ளும்போது பாதுகாக்கப் படுகிறோம் என்ற நினைவு கூடவே இருக்கவேண்டும்.

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தவே நடமாட்டக் கட்டுப்பாடு. கொரோனாவுக்கு மக்கள் மீது பாசம் அதிகம். வெகு சுலபமாக நட்பு பாராட்டும். தொர்றிகொள்வதில் நாயுறுவி ரகம். கொல்வதில் நயவஞ்சகம். இந்த நட்பு கூடா நட்பு. இதனால் உயிர் போகும். அதனால் எட்டிநில் என்கிறார்கள்.

எட்டிநில் என்பது எச்சரிக்கை மட்டுமல்ல. ஏமாந்துவிடக்கூடாது என்பதன் உயிர் மொழி. அதற்கான விலை எதுவாக இருக்கும்? மீறப்படுமானால் உயிர் போகும். நம் அன்பானவர்களுக்கு நாமே எமன் ஆகிவிடக்கூடாது. அந்தத் திமிரின் விலை வெறும் ஆயிரம்வெள்ளி அபராதம் மட்டுமல்ல. ஆறுமாதம் சிறைவாசம் மட்டும் அல்ல. செய்வினைக்கு எதிர் வினையாக உயிர் போகும் என்பதுதான்.

அந்த விபரீத விளையாட்டில் கலந்துகொள்கின்றவர்கள் தங்கள் குடும்பத்தை அடகுவைக்க முனைந்தவர்கள் என்றுதானே கொள்ளல் தகும்! செய்வினைக்கு எதிர்வினை உண்டு. ஆதனால் திமிர் விளையாட்டில் ஈடுபடாமல் வீட்டில் இருந்தால். வீட்டிலுல்ளவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். – கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here