கொரோனாவுக்கு ஆண்கள் அதிகம் பலி: காரணம் என்ன?

கோலாலம்பூர் –

மலேசியாவில் கொரோனா காரணமாக மரணமுற்றவர்களுள் பலர் ஆண்களாக இருக்கின்றனர். இதர உலக நாடுகளிலும் இதே நிலைதான் உள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இதுவரை கொரோனாவினால் மலேசியாவில் 58 ஆண்கள் இறந்தனர். மொத்த மரண எண்ணிக்கை நேற்றுவரை 76 ஆகும்.

மரணமுற்ற கொரோனா நோயாளிகளுள் 76 விழுக்காட்டினர் ஆண்கள் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. இத்தாலியில் 68 விழுக்காடு ஆண்களும் சீனாவில் 64 விழுக்காடு ஆண்களும் ஸ்பெய்ன் நாட்டில் 63 விழுக்காடு ஆண்களும் ஆஸ்திரேலியாவிலும் சுவீடனிலும் 60 விழுக்காடு ஆண்களும் கொரோனாவுக்குப் பலியாகி இருக்கின்றனர்.

இந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியாவில் மரணமுற்ற ஆண்களின் விகிதம் அதிகமாகும். கொரோனாவினால் ஏன் அதிகமான ஆண்கள் இறந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று மலேசிய மருத்துவச் சுங்கத் தலைவர் டாக்டர் என். ஞானபாஸ்கரன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் அதிகமான ஆப்பிரிக்க அமெரிக்கன் மக்கள் இந்த நோயால் அதிகம் இறக்கக்கூடிய ஆபத்து உள்ளது என்பதையும் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
வாழ்க்கை முறை, புகைபிடிக்கும் பழக்கம் போன்றவற்றால் அதிகமான ஆண்கள் கொரோனாவுக்குப் பலியாவதாகக் கடந்த மாதம் பிரிட்டிஷ் மருத்துவச் சஞ்சிகையான லான்செட் வெளியிட்ட ஆய்வு கூறியிருக்கிறது.

தொற்றுநோய் அல்லது தொற்று அல்லாத நோய்களுக்கு எதிராக ஆண்களைவிட பெண்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளது என்று தனியார் மருத்துவ நிபுணர் டாக்டர் குல்ஜிட் சிங் தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடல் ரீதியான சுறுசுறுப்பின்மை, புகையிலைப் பயன்பாடு, மதுபானம் போன்றவற்றால் மலேசிய ஆண்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாவதை 2015இல் வெளியான மலேசிய மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது.

அறுபது விழுக்காடு ஆண்கள் மிதமிஞ்சிய எடை அல்லது உடல் பருமனைக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்று சுகாதார சமூகக் கொள்கைக்கான கெலன் மையத்தின் நிர்வாகத் தலைவர் அஸுருல் முகமட் காலிப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கிறது என்றார் அவர். பொதுவாகவே பெண்கள் ஆண்களைவிட கூடுதல் ஆயுட்காலத்தைக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி சுகாதாரத்தைப் பேணுவதில் பெண்களே சிறந்த நிலையில் இருக்கின்றனர் என்பதை பல்வேறு ஆய்வுகளும் கூறியிருக்கின்றன என்று டாக்டர் குல்ஜிட் சிங் தெரிவித்துள்ளார்.

கழிப்பறையை விட்டு வெளியே வரும் ஆண்களில் 15 விழுக்காட்டினர் தங்கள் கைகளைக் கழுவுவதில்லை என்றும் இதில் பெண்களின் விகிதம் சுமார் 7 விழுக்காடு எனவும் அமெரிக்க ஆய்வு கூறுகிறது.

ஐம்பது விழுக்காடு ஆண்களே சோப்புகளைப் பயன்படுத்திக் கைகளைக் கழுவுகின்றனர். இதில் பெண்களின் விகிதம் 78 விழுக்காடாக உள்ளது எனவும் ஆய்வு கூறுகிறது. – ஃபிரி மலேசியா டுடே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here