2ம் உலக போர்,கொரோனாவையும் வென்ற 99 வயது முன்னாள் ராணுவ அதிகாரி

ராணுவ அதிகாரி
99 வயது முன்னாள் ராணுவ அதிகாரி

பிரேசிலியா, ஏப்ரல் 15-

இரண்டாவது உலக போர் நடந்தபொழுது பிரேசில் நாட்டின் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் எர்மேண்டோ பைவெட்டா (வயது 99). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனால் பிரேசிலியா நகரில் உள்ள ராணுவ படையினருக்கான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் உடல்நலம் தேறினார்.

உடல் தளர்ந்தும் மனம் தளராத நிலையில், கடந்த 8 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் அவர் குணமடைந்து உள்ளார். ராணுவத்தினர் அணியும் பச்சை வண்ண தொப்பி அணிந்தபடி, கைகளை வானை நோக்கி அசைத்தபடி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார்.

அவருக்கு மருத்துவமனையில் இருந்த பணியாளர்கள் பேண்ட் வாத்தியம் இசைத்தும், கைத்தட்டி உற்சாகப்படுத்தியும் வழியனுப்பி வைத்தனர்.

2வது உலக போரில் பிரேசில் ராணுவம் வெற்றி பெற்றதற்கான 75வது ஆண்டு கொண்டாட்ட தினத்தில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் அவர் மற்றொரு போரில் வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 1,532 பேர் பலியாகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here