செலாயாங் பாசார் போரோங் பகுதியில் 15,000 பேரிடம் பரிசோதனை

கோலாலம்பூர் –

கோவிட் -19 கிருமி தொற்றுநோய் தாக்கத்தினால் செலாயாங் பாசார் போரோங் அருகில் உள்ள எட்டுக் குடியிருப்புப் பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கும் வேளையில் இங்குள்ள 15,000 பேரிடம் நேற்று முதல் தீவிர மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த 15,000 பேரிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள 500க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் கடமையில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். எட்டுக் குடியிருப்புப் பகுதிகளிலும் மருத்துவப் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 1,500 முதல் 2,000 பேரிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஒரு வாரத்திற்குள் 15,000 பேரிடம் மருத்துவப் பரிசோதனை முடிவடையும் வேளையில் ஒவ்வொரு மருத்துவப் பரிசோதனை முகாமிலும் 10 போலீஸ்காரர்களும் 3 ராணுவ வீரர்களும் கடமையில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

மருத்துவப் பரிசோதனைக்கு செலாயாங் பாசார் போரோங்கில் உள்ள 8 குடியிருப்பு மக்களும் கண்டிப்பாக வர வேண்டும். கடமையில் இருக்கும் அதிகாரிகளைப் பார்த்து பயப்படத் தேவையில்லை.

மருத்துவப் பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்படி அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. நாட்டில் கோவிட் – 19 கிருமித்தொற்று நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் செலாயாங் பாசார் போரோங் ஓர் அபாயகரப் பகுதியாக விளங்குவதால் திங்கட்கிழமை முதல் இங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கோவிட்- 19 தொற்றுநோய்க் கிருமி பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் செலாயாங் பாசார் போரோங் சுற்றிலும் உள்ள 8 குடியிருப்புப் பகுதிகளிலும் ஊடரங்கு விதிக்கப்பட்டுள்ளது.

பத்துகேவ்ஸ் சாலை வட்டம் முதல் ஸ்ரீமுர்னி குடியிருப்புப் பகுதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாமான் ஸ்ரீமுர்னி 1, தாமான் ஸ்ரீமுர்னி 2, தாமான் ஸ்ரீமுர்னி 3, தாமான் பத்து வியூ, தாமான் பத்து ஹம்பார், பூசாட் பண்டார் உத்தாரா ஆகிய பகுதிகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள முக்கியப் பகுதிகளாகும்.

இந்த இடங்களில் முள்வேலிக் கம்பகள் அமைக்கப்பட்டுள்ளதால் யாரும் அங்கு செல்வதற்கு அனுமதி இல்லை. போலீசாரும் ராணுவத்தினரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

செலாயாங் பாசார் போரோங்கில் வேலை செய்யும் அந்நியப் பிரஜைகள் சிலர் ஸ்ரீபெட்டாலிங்கில் நடந்த தப்லிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கட்டம் கட்டமாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப்போது அந்த வளாகம் முழுவதும் முள்வேலிக் கம்பிக்குள் அடங்கி கிடக்கிறது.

இதனிடையே, இங்குள்ள மக்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் உடனடியாக குளிப்பதற்கு இரண்டு குளியல் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூட்டரசுப் பரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

இங்கு அதிகளவில் அந்நியப் பிரஜைகள் இருப்பதால் அவர்களிடம் மருத்துவப் பரிசோனை செய்யும் பணியாளர்கள் உடனடியாக குளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூர் மாநகரம் உட்பட தலைநகர் முழுவதும் கோவிட் -19 தாக்கத்தில் இருந்து முற்றாக விடுபட வேண்டும் என்பதால் அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here