மீண்டும் வெள்ளக்காடானது லெபோ அம்பாங் சாலை

பரிதவிக்கும் இந்திய வியாபாரிகள்

கோலாலம்பூர் –

தொடர் அடைமழையால் லெபோ அம்பாங்கில் மீண்டும் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நேற்று முன்தினம் மாலையில் பெய்த மூன்று மணி நேர அடைமழையால் பல கடைகளில் வெள்ளம் புகுந்தது. வெள்ளம் வடிய சில மணி நேரமானதாக எடுத்துக் கொண்டதாக லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தகச் சங்கத் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசுல் தெரிவித்தார்.

கிருமி தொற்றுநோய் தாக்கத்தினால் மஸ்ஜிட் இந்தியா உட்பட முக்கியச் சாலைகள் மூடப்பட்டிருக்கின்ற நிலையில் மக்கள் நடமாட்டம் நிறைந்த செட்டித்தெரு என்று அழைக்கப்படும் லெபோ அம்பாங் நிசப்தமாக காட்சியளிக்கிறது என்றார்.

நேற்று முன்தினம் மாலை 5.00 மணி அளவில் பயங்கர இடியுடன் பெய்த அடைமழை இரண்டு மணிநேரம் வரை நீடித்தது. இதனால் லெபோ அம்பாங்கில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் பல கடைகளில் ஏறியது என்று டத்தோ ஹாஜி அப்துல் ரசுல் வேதனையோடு தெரிவித்தார்.

கடந்த வார சனிக்கிழமை லெபோ அம்பாங்கில் உள்ள கடைகளில் வெள்ளம் ஏறியது. மூன்று தினங்கள் கழித்து மீண்டும் மோசமான வெள்ளம் ஏறியதால் பல வியாபாரிகள் நிம்மதியை இழந்திருக்கிறார்கள் என்றார் அவர்.

இதனிடையே, இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் வெள்ளம் வடிந்த நிலையில் கடைகளை சுத்தம் செய்ய எங்களுக்குப் பலமணி நேரம் தேவைப்பட்டது என்று கடைக்காரர்கள் தெரிவித்தனர். மீண்டும் ஓர் அடைமழை வந்தால் எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்று வியாபாரிகள் வேதனையோடு தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here