கொரோனா வைரஸ்: இறந்ததாகக் கூறப்பட்டவர் மூன்று வாரம் கழித்து உயிருடன் திரும்பினார்

ஈக்குவடார் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்ட 74 வயதான பெண் ஒருவர் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆல்பா மரூரி என்னும் பெண்ணின் குடும்பத்திற்குக் கடந்த மாதம் அவர் இறந்து விட்டார் என மருத்துவமனையிலிருந்து தெரிவிக்கப்பட்டது. அவரது சாம்பல் எனக் கூறி ஒரு சாம்பல் பெட்டியையும் அவருக்கு வழங்கினர்.

ஆனால் மூன்று வாரமாக மருத்துவமனையில் கோமாவில் இருந்த மரூரி வியாழக்கிழமையன்று கோமாவிலிருந்து மீண்டு சுய நினைவுக்குத் திரும்பியுள்ளார். மருத்துவர்களிடம் தன்னுடைய சகோதரிக்கு அழைக்குமாறு கேட்டுள்ளார்.

இந்த செய்தி கேள்விப்பட்டு அவர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அவர்கள் வீட்டில் இருப்பது யாருடைய சாம்பல் எனத் தெரியவில்லை.

இந்த குழப்பத்திற்காக மருத்துவமனை அந்த குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளது. ஈக்குவடார் நாட்டில் அதிகம் கொரோனாத்தொற்று பரவும் இடமான க்வாயக்வில் என்னும் நகரில் மரூரி வசிக்கிறார்.

ஈக்குவடார் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 22,000க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 600 பேர் இறந்துள்ளனர்.

கடந்த மாதம் கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதற்குச் சிரமம் ஆகிய காரணங்களால் மரூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என எல் கமெர்சியோ என்னும் உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் 27 அன்று அவர் இறந்துவிட்டார் எனக் கூறப்பட்டது. மருத்துவமனையில் ஒரு சடலமும் காண்பிக்கப்பட்டது. ஆனால் சமூக விலகல் காரணமாகத் தூரத்திலிருந்து பார்க்குமாறு குடும்பத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மரூரியின் உறவினர் ஜைமி மோர்லா அது மரூரி என மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here