தைவான் அருகே சீனா மீண்டும் போா் ஒத்திகை

தைவான் துணை அதிபா் வில்லியம் லாயின் அமெரிக்கப் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்தத் தீவைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகை நடத்தியது. தைவான் தீவைச் சுற்றிலும் சீனப் படைகள் மேற்கொள்ளும் ஒத்திகையில் போர் கப்பல்களும், போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தேவைப்படும் நேரத்தில் கடல் மற்றும் வான் எல்லைப் பகுதிகளை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான தயார் நிலையை உறுதி செய்யும் வகையில் இந்த போர் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. மத்திய அமெரிக்க நாடான பராகுவேவுடனான நல்லுறவை மேம்படுத்துவதற்காக தைவான் துணை அதிபா் வில்லியம் லால் அண்மையில் அந்த நாட்டுக்குச் சென்றிருந்தார்.

அந்தச் சுற்றுப் பயணத்தின்போது அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ மற்றும் நியூயார்க் நகரங்களுக்கும் அவா் சென்றார். இதற்கு சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தைவான் தீவைச் சுற்றிலும் இந்த போர் ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது.

தைவானை நாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்வோம்; அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப்போவதில்லை என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறார்.

இந்தச் சூழலில், சீனாவின் எதிர்ப்பையும் மீறி தென் அமெரிக்காவில் தூதரக உறவைக் கொண்டுள்ள ஒரே நாடான பராகுவேவுக்கும், மறைமுக உறவைக் கொண்டுள்ள அமெரிக்காவுக்கும் தைவான் துணை அதிபா் சென்றதைக் கண்டிக்கும் நிலையில் இந்தப் போர் ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here