‘டிரைவ் த்ரு’ வாயிலாக ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிமுகம்

பாகான் டாலாம் –

பினாங்கு மாநில அரசு, பொருளாதாரத் திட்டமிடல் பிரிவின் மூலம் அண்மையில் வழங்கிய ஊக்கத்தொகை பெறுவதற்கான அனைத்து ஆவணங்கள் சமர்ப்பிக்க தவறிய வாடகைக்கார் ஓட்டுநர்கள் மற்றும் இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது.

மாநில முதல்வர் சௌ கொன் இயோ ‘டிரைவ் த்’ வாயிலாக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு வருகையளித்து ஏறக்குறைய 40 ஓட்டுநர்களுக்கு பட்டர்வொர்த், அப்துல்லா அமாட் படாவி அரங்கில் உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சி தீவுப் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர்களுக்கும் கொம்தாரிலும் செபெராங் பிறையைச் சேர்ந்தவர்களுக்கும் மாநில பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு ஏற்பாட்டில் நடைபெறும் என்று மாநில முதல்வர் சௌ கொன் இயோ தெரிவித்தார்.

பெரும்பான்மை ஓட்டுநர்கள் இணைய வழி தங்களின் ஊக்கத்தொகை பெற்றுக்கொண்டனர். முதல்வர் அறிவித்த பினாங்கு மக்களுக்கான உதவித்திட்டத்தில் 75 மில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தத் திட்டத்தில் வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கு தலா 500 வெள்ளி மற்றும் இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்குத் தலா 300 வெள்ளி என்று ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் வருமானத்தை இழந்து தவிக்கும் ஓட்டுநர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டது என்று முதல்வர் கூறினார். மாநிலத்தில் உள்ள 2,252 வாடகைக்கார் ஓட்டுநர்களில், 2,045 அல்லது 90.9 விழுக்காட்டு பேர் மின்னணு நிதி பரிமாற்றம் மூலம் இப்பணம் பெற்றதாக சௌ கூறினார்.

8,571 இ-ஹெய்லிங் ஓட்டுநர்களில் 8,335 அல்லது 97.25 விழுக்காட்டினர் மின்னணு பரிமாற்றத்தின் மூலமாகப் பணம் பெற்றனர். மொத்தத்தில் மாநில அரசு வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கு 1.1 மில்லியனுக்கும் இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு 2.5 மில்லியனுக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும்வரை நமது பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது பொது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோடு அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு ஆதரவு அளிப்பதற்கும் மிகுந்த சவாலாக இருக்கும். இந்த ஆணை நிறைவுக்குப் பின்னர், மத்திய அரசாங்கம் மற்றும் அனைவரும் சமூக-பொருளாதார மீட்சி குறித்து சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.

கொரோனா கிருமி பரவுவதைத் தடுக்க மக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். இந்தத் திட்டத்தில் எந்த சமரசமும் இருக்காது. இச்சூழல் மிகுந்த சவாலாக அமைந்தாலும் முடிந்தவரை இக்கிருமி தொற்று விரைவாக குணமடையும் என நம்புகிறோம். இச்சூழ்நிலையை எதிர்கொள்ள நாம் அனைவரும் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

கோவிட் -19 எண்ணிக்கை பதிவில் சரிவு நிலை ஏற்படுவதற்கு ஏற்ப, மத்திய அரசு பல துறைகளுக்கு கட்டங் கட்டமாக அனுமதி அளிக்கக்கூடும் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here