2ஆம் கட்ட பிபின் உதவித் தொகை மே 4 முதல் வழங்கப்படும்

புத்ராஜெயா –

இரண்டாம் கட்ட தேசியப் பரிவு உதவித்தொகை வரும் மே 4ஆம் தேதி முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ சப்ருல் அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

பி40, எம்40 பிரிவைச் சேர்ந்த தனிநபர் மற்றும் குடும்பத்தார் ஆகியோருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. ஏப்ரல் 26ஆம் தேதி வரை இந்த உதவித்தொகை பெறுவதற்காக மொத்தமாக 3.26 மில்லியன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றுள் 2.96 மில்லியன் புது விண்ணப்பங்களும் 305,000 மேல் முறையீடு விண்ணப்பங்களும் ஆகும்.

நாளை ஏப்ரல் 30ஆம் தேதி இந்த விண்ணப்பங்களுக்கான இறுதி நாளாகும். விண்ணப்பங்களைப் பரிசீலித்த பின்னர் தகவல்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என நேற்று நடைபெற்ற தேசியப் பரிவு பொருளாதார விரிவாக்க உதவித் திட்டத்தின் மூன்றாம் செயலாக்க அறிக்கையைச் சமர்ப்பித்தல் நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, முதல்கட்ட பரிவு உதவித்தொகை திட்டத்தில் 7.74 மில்லியன் பேர் மொத்தமாக 5.47 பில்லியன் வெள்ளி உதவித்தொகையைப் பெற்றுள்ளனர். அதிலும் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்காக ரொக்க தொகை வழங்கும் செயல்முறை நாடு தழுவிய அளவிலுள்ள பிஎஸ்என் வங்கிகளில் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here