சென்னை, மே.1-
கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் குழந்தைகள் எப்போதும் தங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் வகையில், காரைக்காலைச் சேர்ந்த 10 வயது இரட்டையர்கள் சுலபமான வகையில் கராத்தே கற்றுக் கொள்ளும் வீடியோவை வெளியிட்டு அசத்தி யுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது கட்டுக்குள் வரும் என யாராலும் கணிக்க முடியாதபடி நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது.
9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த வருடம் ஜூலை மாதம்தான் வகுப்புகள் தொடங்கும் என்ற தகவலும் உலா வருகிறது.
இதில் பெற்றோருக்கு இருக்கும் பெரிய கவலை குழந்தைகளை எப்படிப் பார்த்துக் கொள்வது, அவர்களை எப்படி பிஸியாக வைத்துக்கொள்வது என்பதுதான். இப்போ துள்ள குழந்தைகள் டிவி, செல்போன்களில்தான் மூழ்கிக் கிடக்கிறார்கள். பக்கத்துக்கு வீட்டுப் பிள்ளைகளுடன்கூட அவர்களை விளையாட அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களின் உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது.
பெற்றோரின் இந்தக் கவலைக்கு அருமையான தீர்வு கொண்டு வந்திருக்கிறார்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைக் சேர்ந்த இரட்டையர்கள் ஸ்ரீவிசாகன், ஸ்ரீஹரிணி. கராத்தே சாம்பியன்களான அக்குழந்தைகள் ஒன்பது வயதுக்குள் இரண்டு பிளாக் பெல்ட் வாங்கி உலக சாதனை படைத்தவர்கள்.
அது மட்டு மல்லாமல் கராத்தேயில் 200க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி உள்ளனர். உலக சாதனை படைத்த முதல் இரட்டையரும்கூட. மற்ற குழந்தைகளைப் போலவே ஊரடங்கால் வீட்டுக்குள் இருக்கும் ஸ்ரீவிசாகனும் ஸ்ரீஹரிணியும் தங்களுக்குத் தெரிந்த கராத்தே கலையை மற்ற குழந்தைகளுக்கும் கற்றுத்தரும் வகையில் கராத்தே பயிற்சி வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
சுலபமாக கராத்தே, சிலம்பம், நுங்சாக் உள்ளிட்ட பல தற்காப்புக் கலைகளைச் செய்து காட்டி வீடியோ வெளியிட்டுள்ளனர். கராத்தே பழகுவது நம் பிள்ளைகளுக்கு உடல் வலிமையை ஏற்படுத்தும் என்பது ஒருபுறம் என்றால் செல்போன் மற்றும் டிவியில் இருந்து அவர்களை விடுவிக்கவும் முடியும். மேலும் வீட்டுக்குள்ளேயே அவர்களுக்கு உடல் உழைப்பையும் தர முடியும்.