மார்க்கெட் தோற்றம் மாறியது : எங்கும் தூய்மை

கோலாலம்பூர் –

தலைநகர், செலாயாங்கிலுள்ள கோலாலம்பூர் பாசார் போரோங்கில் இப்போது சட்டவிரோத ஸ்டால் கடைகள் இல்லை. கள்ளக்குடியேறிகளும் இல்லை. இப்போது அது தூய்மையாகக் காணப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை அங்கே வாங்கிக்கொண்டு திரும்பும்போது நிம்மதிப் பெருமூச்சு விடுவதைக் காண முடிகின்றது.

செலாயாங் பாசார் போரோங்கில் மொத்தம் 4 நாட்கள் தூய்மைப்பணி மேற்கொள் ளப்பட்டது. சட்டவிரோத ஸ்டால்கள் அகற்றப்பட்டன. கள்ளக்குடியேறிகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பூசாட் பண்டார் உத்தாரா பகுதியைச் சுற்றிலும் ஏப்ரல் 20ஆம் தேதி பொதுமக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு வலுப்படுத்தப்பட்டபின் அந்த மார்க்கெட்டில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

எம்சிஓ உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாக இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் செலாயாங் பாசார் போரோங் இப்போது வேறு மாதிரியாக உள்ளது என்று அங்கு பொருட்களை வாங்க வந்த உணவக நடத்துநர் தியாகராஜன் கோவிந்தசாமி தெரிவித்தார்.

செலாயாங் பாசார் போரோங்கில் இதற்கு முன்பு அந்நியத் தொழிலாளர்கள் கண்ட கண்ட இடங்களில் எச்சிலைத் துப்பிவைத்திருந்தனர். பல இடங்களில் வெற்றிலை எச்சியைப் பார்க்க முடிந்தது. சிவப்பு நிறத்தில் கிடந்த அந்த எச்சிலை மிதிக்க வேண்டிய நிலையும் இருந்தது என்றார் அவர்.

ஆனால் இப்போது அந்நிலை இல்லை. சுத்தமாக இருக்கின்றது. நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத ஸ்டால்கள் அகற்றப்பட்டு வாடிக்கையாளர்களும் சுதந்திரமாக நடந்துசெல்ல முடிகின்றது என்றார் அவர்.

இதற்கு முன்பு நடைபாதைகளில் ஸ்டால்கள் இருந்ததால் நெரிசலாகக் காணப்பட்டது. நடைபாதையில் பொருட்களைத் தூக்கிக்கொண்டு வரும் தொழிலாளர்கள் வழிவிடுங்கள் வழிவிடுங்கள் என்று பயனீட்டாளர்களை நோக்கிக் கூச்சலிட்டனர். இப்போது அதுபோன்ற கூச்சல் இல்லை.

வாகனம் நிறுத்தும் பகுதிகளிலும் முன்பு சட்டவிரோத ஸ்டால்கள் இருந்தன. அவை இப்போது அகற்றப்பட்டுவிட்டன. இதனால் மார்க்கெட்டிற்கு வருவோர் வாகனங்களை நிறுத்துவதற்கு இடவசதி ஏற்பட்டுள்ளது.

அதோடு மொத்த காய்கறி வியாபாரிகளும் தங்கள் லோரிகளில் எளிதாக சரக்குகளை ஏற்ற முடிகிறது என்று அவர் கூறினார். தங்கள் கடைகளில் வியாபாரிகள் உள்ளூர்க்காரர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள். இது வாடிக்கை யாளர்களுக்கும் வசதியாக உள்ளது.

நண்பர்களின் உதவியையும் எங்களால் பெற முடிந்தது என்று மொத்த காய்கறி வியாபாரி டான் என்பவர் சொன்னார். எனக்கு வயதாகிவிட்டதால் என் மகன் உதவியாக இருக்கின்றார்.

இந்த மார்க்கெட்டிற்குப் புதிய தோற்றத்தை ஏற்படுத்துவதில் அதிகாரிகள் முக்கியப் பங்கை ஆற்றியுள்ளனர் என்று காய்கறி வியாபாரி லியூ முன் செங் தெரிவித்தார்.
அனைத்து வியாபாரிகளுக்கும் இலவசமாகவே கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here