மருத்துவச் சவாலில் முகக் கவசங்கள்!

கோவிட் -19 தோன்றுமுன் அதன்பேர் கொரோனா தொற்று, அப்போது மிக அவசரமாய் தேவைப்பட்டது முகக்கவசங்கள். அப்போது சிலர் அதை வேடிக்கையாகப் பார்த்தார்கள். ஏறக்குறைய ஒருமாதம் வரை முகக்கவசங்கள் போராட்டம் மிக உச்சமாய் இருந்தது .

முகக் கவசம் ஒன்று கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது. அதுமட்டுமல்ல முகக்கவசம் அவசியம் என்று ஆனபோது பதுக்கல் வேலைகள் பவ்வியமாக நடைபெற்றன.. மதில்மேல் பூனையாக விற்பனை இருந்தது.

அப்போதெல்லாம் முகக் கவசத் தயாரிப்பு குறைவாக இருப்பதாகக் காரணம் கூறப்பட்டது. ஆனாலும்,  சாலைத்தடுப்புச் சோதனையின்போதும் அனுமதிக்கப்பட்ட தளங்களிலும் நுழையும்போது முகக்கவசங்கள் முக்கியத் தேவையாக இருந்தன.

இம்முகக் கவசங்களை வீட்டுக்கு நான்கு என்றும் அரசாங்கம் விநியோகம் செய்தது. இது, மாதத்திற்கொன்றா? நாளுக்கொன்றா? என்பதிலும் குழப்பம் அதிகமாக இருந்தது.

இதில், என்ன பிரச்சினை, அப்படியொன்றும் பெரிதாய் பிரச்சினை இல்லை. மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட, மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வீட்டிலேயே இருந்தால் முகக்கவசத்திற்கு அதிகம் வேலை இல்லை. அதனால் நான்கு என்பது போதுமானதுதானே என்பதில் திருப்திகொண்டிருந்தபோது முகக்கவசங்கள் தேவையா அல்லது தேவை இல்லையா என்ற சர்ச்சைகளும் இருந்தன.

இதற்கிடையில் முகக்கவசம் இருந்தால் போதும் என்றும் உருவாகிவிட்டது.  இந்த நிலையில், நடமாடிகளாக இருந்த வங்காளதேசிகள் கிடைத்த துண்டுத் துணிகளைப் பொறுக்கித் தைத்து முகக்கவச விற்பனை செய்தார்கள். இவன்றின் விலை 5 வெள்ளி. இதில் ஒரு நன்மையும் இருந்தது. துவைத்து மாற்றிக்கொள்ள முடிந்தது.

சீனாவிலிருந்து வந்த முகக் கவசங்களில் தொற்று இருப்பதாவும் வதந்திகள் பரவின. ஆனால், நிரூபிக்கப்படவில்லை. மக்கள் அதைப் பயன்படுத்தினர். மக்களுக்குத் தேவை முகக் கவசம் அவ்வளவுதான். இடு ஒரு போலித்தனம்தானே!

இனிவரும் காலங்களில், வீட்டிற்கான குப்பைப் பைகளை வாங்கிகொள்ளும்போது, அதே பட்டியலில் முகக் கவசமும் இணைந்திருக்கும். இனி, முகக் கவசப்  பயன்பாட்டிலிருந்து மனிதர்கள் விலகியிருக்க முடியாது என்றாகிவிட்டது. இந்நடைமுறை இன்னும் ஈராண்டுகள் வரையாவது இருக்கும். அதற்குமுன் முகவசங்கள் துவைத்துப் பயன்படுத்தப்படுவதாக இருந்தால் மட்டுமே மக்கள் தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கத்திற்கு மாறுவார்கள்.

இதற்குத் தரமான முகக்கவசங்கள் தயாரிக்கப்படுவதை மலேசிய  சிரிம் ( SRIM-MS ) உறுதி செய்யுமா?

மற்றொன்று, இப்போது பயன்பாட்டில் உள்ள முகக்கவசங்கள் தெருவில் வீசப்படுகின்றன. இம்முகக் கவசங்களால் தொற்று பரவுதல் நிச்சயம் ஏற்படும். இவற்றையும் கையாளும் வழிகாட்டிகள் இப்போதே தொடங்கபட வேண்டும்.

மருத்துவர்கள் பயன்படுத்தும் என் 95 வகை முகக்கவசங்கள் தீர்வுக்கு ஏற்றதாக இருக்காது. மருத்துவர்கள் பயன்படுத்தியபின் அவற்றை மருத்துவக் கழிவில் இணைத்துவிடுவதால் அது பிரச்சினையாக இல்லை. மக்கள் பயன்படுத்தும் முகக்கவசங்கள் மட்டுமே இப்போது பிரச்சினையாக உருவெடுத்துகின்றன..

வளர்ப்புப்பிராணிகள், குப்பைகளிலிருந்து அவற்றை இழுத்துச் செல்கின்றன. சில வீடமைப்புப் பகுதகளில் உள்ள குரங்குகளாலும் குப்பைகள் சிதறப்படுகின்றன. இதனால் பிற நோய்களும் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இது சவால் அல்ல, மருத்துவச் சவால்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here