இணையதள சூதாட்டக் கும்பல் முறியடிப்பு

10 பேர் கைது

கோலாலம்பூர் –

மவுன்ட் கியாரா பகுதியில் கோலாலம்பூர் போலீஸ் படையின் டி7 பிரிவினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் இணையதள சட்ட விரோத சூதாட்டக் கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியிலுள்ள கடை ஒன்றில் இந்தச் சோதனை நேற்று முன்தினம் பகல் 12.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு இணையதளச் சூதாட்ட நடவடிக்கை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்வழி அங்கு பணிபுரிந்துவந்த 5 உள்நாட்டுச் சீன ஆடவர்களும் 4 உள்நாட்டு சீனப் பெண்மணிகளும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 23 வயதில் இருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்களாவர் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி மஸ்லான் பின் லாஸிம் தெரிவித்தார்.

இந்தக் கைது நடவடிக்கையின்போது அக்கடையில் இருந்த கணினிகள், கைத்தொலை பேசிகள், இணையதளத் தொடர்புச் சாதனங்கள், நிறுவனப் பதிவு சான்றிதழ்கள் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 30 ஆயிரம் வெள்ளியாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இந்தக் கும்பல் சீனா மற்றும் ஆசிய நாடுகளில் வி-செட், டெலிகிராம், கியூ கியூ செட் போன்ற சமூக வலைத்தளங்களின் வழி சூதாட்ட நடவடிக்கைகளை சந்தைப்படுத்தி வந்துள்ளது.

இவர்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வந்துள்ளனர். குறிப்பாக தொலைபேசி மற்றும் கணினி வாயிலாக இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிலும் அவர்கள் இவ்விடத்தில் ஒரு வருடமாகச் செயல்பட்டு வந்துள்ளனர். இந்தக் கும்பல் ஒரு நாளைக்குக் குறைந்தது 5 லட்சம் வெள்ளி வரை லாபம் ஈட்டி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தக் கடைக்கு அவர்கள் மாதத்திற்கு 6 ஆயிரம் வெள்ளி வாடகை செலுத்தி வந்துள்ளனர். மேலும் இங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு மாதச் சம்பளமாக 3 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரம் வெள்ளி வரை வழங்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காக பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் 1953 பொது சூதாட்டச் சட்டம் பிரிவு 4(1)(சி) மற்றும் பிரிவு 4(1)(ஜி) கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 லட்சத்திற்கு உட்பட்ட அபராதம் அல்லது 5 வருடங்களுக்கு உட்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இதனால் பொதுமக்கள் இதுபோன்ற சூதாட்டங்களில் ஈடுபடக்கூடாது. மேலும் இந்தச் சூதாட்டக் கும்பல் குறித்து தகவல் அறிந்தவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவிக்கும்படி அவர் தமது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here