பெருநாள் காலம் என்பது அனைவருக்கும் விருப்பமானது. மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் காலமும் இதுதான். செய்யும் தொழில் எதுவானாலும் ஓய்வு வலைக்குள் இருக்கும் காலமும் இதுதான்.
ஒரு பொறுப்பான தொழிலில் உள்ளவர்கள் ஓய்வு என்று இருக்க முடியாத காலமும் இதுதான். இந்த நேரத்தில் அசதி என்ற ஒன்று கூடவே வரும். நேரம்பார்த்து மடக்கிப்போட்டுவிடும். இந்தச் சமயத்தைத்தான் சந்தர்ப்பவாதிகள்
எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள் என்று எச்சரிக்கிறார் நாட்டின் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின்.
அனைத்து மனிதர்களும் பலமானவர்கள் அல்லர். பலவீனமானவர்களும் இருக்கிறார்கள். பலவீனமானவர்கள் யார் என்பது எதிரிகளுக்குத் தெரியும். எதிரிகள் என்பது எதிர்ப்பானவர்கள் மட்டுமல்லர். நாட்டிற்குள் கள்ளத்தனமாக நுழைகின்றவர்களும் எதிர்கள்தாம். அவர்கள் வாழ்வு தேடி வருவதோடு கொரொனாவையும் கொண்டுவருகிறார்கள்.
எதிர்ப்பவர்கள் எல்லாம் எதிரிகள் அல்லர். எதிர்க்காமல் சிலர் இருப்பார்கள். கோரோனாபோல் நுழைந்து பாழ்படுத்திவிடுவார்கள். அதனால்தான் கள்ளத்தனமாக நாட்டிற்குள் நுழைந்து கொரோனா தொற்றை உருவாக்கியிருக்கிறார்கள் என்ற ஐயமும் இருக்கிறது.
கள்ளதனத்தால் நல்லத்தனம் சீரழிந்துவிடும். ஆதலால் பெருநாள் காலத்தில் மகிழ்ச்சிக்கும் எல்லை வகுத்துக்கொண்டு நாட்டின் எல்லைப்பகுதியைக் கருத்தாகக் கவனிக்க வேண்டும் என்கிறார் பிரதமர். இதை பிரதமர் சொல்லித்தான் செய்யவேண்டும் என்பதல்ல குடிமக்கள் கடமை.
நிபந்தனையுடனான நடமாட்ட கட்டுப்பாட்டில், பெருநாள் திளைப்பில் அனைவரும் இருப்பார்கள். ஆனாலும், அதிகாரிகளுக்கு எல்லையின் மீது எல்லையில்லா கவனம் இருக்கவேண்டும் என்பதைத்தான் பிரதமர் கூறியிருக்கிறார்.
வெளியேற்றப்பட்ட அந்நியர்கள் கள்ளத்தனமாக நுழைவார்கள்.. இதில்,சந்தேகமே இல்லை. அவர்களுக்கு எலிவழி தெரியும். கள்ளர்கள் அனைத்திலும் அத்துப்படியானவர்கள் . ஆதலால் நாட்டின் எல்லை நுழைவாயில்களில் மட்டும் பார்வை செலுத்தாமல் எலிவழிகளிலும் பார்வை செலுத்தினால் பாதுகாப்பு மிகுதியாக இருக்கும்.
கள்ளத்னமாக நுழைகின்றவர்களுக்கு மலேசியர்களே துரோகிகளாக இருக்கின்றவர்களும் உண்டு. அவர்களையும் விட்டுவிடக்கூடாது. கள்ளத்தனத்தோடு கோரோனா வந்துவிடக்கூடாது. வருமுன் யோசி, வந்தபின் பேசிப்பயனில்லை என்பதே இந்த நேரத்தில் சரியான வார்த்தையாக இருப்பதால், நாட்டின் எல்லைப்பகுதி, கடல்பகுதி, வான்வெளி கவனிப்பாளர்கள் கடமையை சரியாகச் செய்தல் வேண்டும். அப்படிச் செய்தால் தான் பெருநாள். நாட்டின் சுகாதாராமும் பாதுகாப்பாக இருக்கும்.
வான்வெளி கண்காணிப்புக்கு ஆறு விமானங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. பகலில் நான்கு முறையும், இரவில் இரண்டுமுறையும் அவர்களின் காவல் சுற்று இருக்க வேண்டும். சுற்று எத்தனைமுறை என்பதல்ல முக்கியம். என்ன நடக்கிறது என்பதுதான் முக்கியம். எதிரிகளை எட்ட விடாதீர்!