26 பணமோசடி வழக்குகள் வாபஸ்: டத்தோஸ்ரீ நிக்கி லியோ RM10 மில்லியன் அபராதம் செலுத்தியதாக சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் விளக்கம்!

கோலாலம்பூர்:

தொழிலதிபர் நிக்கி லியோ என அறியப்படும் லியோ சூன் ஹி மீதான 26 பணமோசடி வழக்குகள் திரும்பப் பெறப்படுவதற்கு முன்னர், அவர் RM10 மில்லியன் (1 கோடி ரிங்கிட்) அபராதம் செலுத்தியதாக மலேசியச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

நிக்கி லியோ மீதான வழக்குகள் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் இன்றித் தள்ளுபடி செய்யப்பட்டதாக 30 சிவில் சமூக அமைப்புகள் கேள்வி எழுப்பிருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் இன்று (ஆகஸ்ட் 7) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது:

2001-ஆம் ஆண்டு பணமோசடி எதிர்ப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருவாய் சட்டத்தின் பிரிவு 92-இன் கீழ் அபராதம் செலுத்தி வழக்குகளை முடிக்க நிக்கி லியோவின் வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு தாக்கல் செய்தனர்.

வழக்கின் ஆதாரங்கள் மற்றும் அரசுத் தரப்பு மதிப்பீடுகளைத் தீவிரமாக ஆய்வு செய்த பின்னரே, RM10 மில்லியன் அபராதம் செலுத்தும் சலுகையை சட்டத்துறைத் திணைக்களம் ஏற்றுக்கொண்டது.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி நிக்கி லியோ இந்த RM10 மில்லியன் தொகையை முழுமையாகச் செலுத்தினார்.

இந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுடன் சேர்த்து RM647,366 பிணைத் தொகையும் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.

அபராதத் தொகை பெறப்பட்டதைத் தொடர்ந்து, 2023 ஜூன் 15 அன்று ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றம் நிக்கி லியோவை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து விடுதலை செய்தது.

இந்த முடிவு கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் சட்டத்துறைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படியே எடுக்கப்பட்டதாகவும், எவ்வித வெளி அழுத்தங்களுக்கும் அல்லது பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கட்டுப்படாமல், சட்ட ரீதியிலான ஆதாரங்களின் அடிப்படையிலேயே வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டதாகவும் AGC தனது அறிக்கையில் உறுதியளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here