RM700 கட்டணத்தில் போலி கடப்பிதழ் பதிவுகள்: ஜோகூரில் ‘Flying Passport’ கும்பலைச் சேர்ந்த மூவர் கைது!

கோலாலம்பூர்:

டவுச்சீட்டு உரிமையாளர்கள் நாட்டில் நேரடியாகச் செல்லாமலேயே, அவர்களின் மலேசிய வருகை மற்றும் வெளியேற்றப் பதிவுகளைப் போலியாக உருவாக்கி வந்த ‘பறக்கும் கடப்பிதழ்’ (Flying Passport) சட்டவிரோதக் கும்பலை மலேசியக் குடிநுழைவுத் துறை முறியடித்துள்ளது.

ஜோகூர், கேலாங் பாத்தாவில் உள்ள சுல்தான் அபு பாக்கார் வளாகத்தில் (KSAB) நேற்று நடத்தப்பட்ட சிறப்புச் சோதனையில் 33 முதல் 41 வயதுக்குட்பட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகக் குடிநுழைவுத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ஜக்காரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் (MACC) இணைந்து நடத்தப்பட்ட ‘ஓப்ஸ் கிராக்’ (Op Crack) என்ற கூட்டுச் சோதனையின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வெளிநாட்டு கடப்பிதழ் உரிமையாளர்கள் நுழைவாயிலுக்கு நேரில் வரத் தேவையின்றி, அவர்களின் கடப்பிதழின் முகப்புப் பக்கங்களை ஏஜெண்டுகள் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் அனுப்பி வைப்பார்கள். அதனைத் தொடர்ந்து இக்கும்பலுடன் இணைந்து செயல்படும் நபர்கள், அந்த விவரங்களைச் சேகரித்துக் குடிவரவுத் துறையின் கணினி அமைப்பில் ஸ்கேன் செய்து போலிப் பயணப் பதிவுகளை உருவாக்குவர்.

இவ்வாறான ஒவ்வொரு போலிச் சேவைக்கும் இக்கும்பல் RM700 கட்டணமாக வசூலித்து வந்தது தெரியவந்துள்ளது.

இச்சோதனையின் போது கைப்பேசிகள், வளாகத்தின் சாவிகள், நகைகள், குடிவரவுத் துறையின் பாதுகாப்பு முத்திரைகள் மற்றும் RM20,000 ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றவர்களின் பயண ஆவணங்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றத்திற்காக 1966-ஆம் ஆண்டு கடவுச்சீட்டுச் சட்டத்தின் பிரிவு 12(1)(h)-இன் கீழ் மூவரும் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காகக் குடிவரவுத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இக்கடத்தல் வலையமைப்ப முழுமையாகக் கண்டறிய தீவிர விசாரணை தொடரும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here