பள்ளி பருவம் என்பது அனைவர் வாழ்விலும் இனிமையான நினைவுகளைக் கொண்டது என்பதனை யாரும் மறுக்க இயலாது. பள்ளிக்கு துள்ளி செல்லும் மாணவர்கள் கோவிட்-19 தாக்கத்தினால் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த வைரசின் ஆரம்பக் கால தாக்கத்தின்போது பள்ளிகளுக்கான விடுமுறை இத்தனை மாதங்கள் நீட்டிக்கும் என்பது யாரும் அறியா விஷயம். கோவிட் கட்டுக்குள் வந்தாலும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுமா? அவ்வாறு திறக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு அது பாதிப்பினை ஏற்படுத்துமா என்று அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து இயங்கலை வழி கல்வி கற்றுதர ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் அமர்ந்து கல்வி போதனையை கற்று வந்த நம் மாணவர்களுக்கு இந்த இயங்கலை கல்வி முறையை கற்று கொள்ள சிறிது காலம் பிடித்தது. அதே வேளை வசதி குறைந்த மாணவர்களால் இந்த இயங்கலை முறையில் கல்வி கற்க முடியாமல் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை மறுக்கவும் முடியாது. வசதி குறைந்த மாணவர்களின் பெற்றோர் எங்கள் அன்றாட உணவிற்கே வழியில்லாமல் இருக்கிறோம்.
இதில் இயங்கலை வழி கல்வி கற்க இணைய வசதி உள்ளிட்டவை தேவை என்பதால் எங்களால் அந்த வசதிகளை தங்கள் பிள்ளைகளுக்கு செய்து தர முடியவில்லை என்ற ஆதங்க குரலையும் நம்மால் கேட்க முடிகிறது. தற்போது இலட்சகணக்கான மாணவர்களின் எண்ண அலை விரைவில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட வேண்டும் என்பதேயாகும்.