ஊதுபத்தி ஏற்றுவது ஈஸ்வரனை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக என்று நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் கூறியிருக்க நாம் கேட்டிருப்போம். அதனுள் மறைந்திருக்கும் உண்மையான பொருளை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்தவுடன், அதனிலிருந்து புறப்படும் தெய்வீக மணம் சுற்றுச்சூழலை சூழ்ந்துவிடும். அது புகைந்து சாம்பலானாலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் தன் மணத்தால் மகிழ்விக்கின்றது. இது ஒரு தியாக மனப்பான்மையின் வெளிப்பாடு. ஓர் உண்மையான இறைத் தொண்டன், தன்னுடைய சுயநல குணங்களை எல்லாம் விட்டொழிக்கவேண்டும். பிறருக்காக நன்மை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். மற்றவர்களின் வாழ்க்கையும் மணம்வீச வழி செய்வதே தெய்வீக செயலாகும்.
ஊதுபத்தி சாம்பலாகி விட்டாலும், அதன் மணம் மட்டும் காற்றில் கலந்துவிடுகின்றது. அதன் மணத்தை முகர்ந்தவர், அதை தம் நினைவிலே வைத்திருப்பர். அதுபோலத்தான், மற்றவர்களுக்காக நன்மை செய்துவிட்டு வாழ்ந்து மறைந்தவர்களின் பேரும்புகழும் என்றுமே மக்களிடையே நிலைத்திருக்கும்.
நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நன்மைத் தரும் நல்ல விஷயங்களைக் கூறுவதும், நல்ல விஷயங்களை அவர்களுக்கு செய்தலும், அவர்கள் எப்போதும் நல்வாழ்வு பெறவேண்டும் என மனதார நினைப்பதும் மிகப் பெரிய உன்னதமான செயலாகும். இதுபோன்ற குணத்தை தான் ஊதுபத்தி குறிக்கின்றது. இதுபோன்ற குணத்தை உடையவர்கள் தான் ஈஸ்வரனுக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள். இதை தான் நம் பெரியவர்கள் அவ்வாறு கூறியுள்ளனர்.