தாவாவ் மருத்துவமனையில் முறைகேடு: மற்றொருவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்திய 80 வயது மூதாட்டி கைது!

தாவாவ், பிப்ரவரி 2:

தாவாவ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகப் பதிவு செய்தபோது, ஆள்மாறாட்டம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 80 வயது வெளிநாட்டுப் பெண்மணியைத் தாவாவ் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, தாவாவ் மருத்துவமனையின் அவசர மற்றும் விபத்துப் பிரிவில் (Emergency and Trauma Department) அந்த மூதாட்டி சிகிச்சைக்காகப் பதிவு செய்துள்ளார். அப்போது அவர் காண்பித்த அடையாள அட்டை (MyKad) மீது அங்கிருந்த மருத்துவப் பணியாளர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து 27 வயதுடைய மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். சந்தேகத்தை உறுதிப்படுத்துவதற்காக, அந்த மூதாட்டி தவாவு தேசியப் பதிவுத் துறைக்கு (JPN) கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பயோமெட்ரிக் கைரேகை சோதனையில் (Fingerprint check), அடையாள அட்டையில் இருந்த தகவல்களுக்கும் அந்த மூதாட்டியின் கைரேகைக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது உறுதியானது என்று, தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜாஸ்மின் ஹுசின் கூறினார்.

“நோயாளி ஒருவர் சிகிச்சை பெறுவதற்காக மற்றொருவரின் அடையாள ஆவணத்தைப் பயன்படுத்துவதாக எங்களுக்குப் புகார் கிடைத்தது. சோதனையில் அது ஆள்மாறாட்டம் என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த மூதாட்டி கைது செய்யப்பட்டார்.”

முறையான ஆவணங்கள் இன்றி மற்றவர்களின் அடையாள அட்டையைப் பயன்படுத்துவது மலேசிய சட்டப்படி கடுமையான குற்றமாகும். இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here