கனடாவை சேர்ந்த பெண் இந்தியாவில் வசிக்கும் வயதான தாயாரை பார்க்க வந்த சமயத்தில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மனைவியை கவனித்து கொள்ள கனடாவில் இருந்து அவர் கணவர் இந்தியா விரைந்துள்ளார்.
டோரன்டோவை சேர்ந்தவர் ஸ்வப்னில் தப்லி. இவர் மனைவி ஸ்மிதா. இருவருமே மருத்துவர்கள் ஆவார்கள். கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் தப்லியும், ஸ்மிதாவும் மும்பைக்கு வந்தனர், ஸ்மிதாவின் வயதான தாயை பார்க்கவே இருவரும் வந்தனர்.
இந்நிலையில் ரொரன்ரோவுக்கு தப்லி மட்டும் திரும்பிய நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக ஸ்மிதாவால் அங்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் ஸ்மிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
மேலும் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை, chemotherapy செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் மனைவியை பார்க்க தப்லியால் இந்தியா வரமுடியவில்லை.
இந்நிலையில் வந்தே பாரத் மிஷன் என்ற திட்டத்தின் மூலம் இன்று கடைசி விமானத்தில் தப்லி பயணிக்கவுள்ளார். ஆனால் விமானமானது டெல்லிக்கு தான் செல்லும் என தெரியவந்துள்ளது. இதனால் உடனடியாக அவரால் மும்பைக்கு வர முடியாது. ஏனெனில் விமான பயணம் செய்வதால் 14 நாட்கள் டெல்லியில் தனிமைப்படுத்தப்படவுள்ளார். இதனால் மனைவியை உடனடியாக பார்க்க முடியாமல் தவிக்கும் மனநிலையில் கணவர் உள்ளார் என தெரியவந்துள்ளது.