வெள்ளை யானை சாபம் தீர்த்தது

துருவாச முனிவர் ஒரு சமயம் காசியில் சிவபூஜை செய்து, முடிவில் சிவபெருமானின் திருமுடியிலிருந்து விழுந்த தாமரைப்பூவை எடுத்து சென்று, வழியில் வெள்ளை யானையின் மீது பவனி வந்த இந்திரனுக்குக் கொடுத்தார். இந்திரன் அலச்சியமாக அதனை ஒரு கையில் வாங்கி, வெள்ளை யானையின் மேல் வைத்தான்.

அது அந்த மலரை கீழேத் தள்ளிக் காலால் மிதித்தது. இதனால் முனிவர் கோபப்பட்டு, நீ செய்த சிவ துரோகத்தால் பூலோகத்தில் பாண்டிய மன்னன் ஒருவனிடம் தோற்றுப் போவாய். அவனுடைய சக்கராயுதம் உன் தலையைக் கொய்துவிடும், கர்வம் பிடித்த இந்த யானை கருமை நிற யானையாகும் என சபித்தார். தேவேந்திரனும் தேவர்களும் நடுங்கி விட்டனர்.

யானையில் இருந்து குதித்த இந்திரன், ஐயனே.! அறியாமல் செய்த பிழையை மன்னிக்க வேண்டும். ஏற்கனவே பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு பல்லாண்டுகள் பூலோகத்தில் வாடிக்கிடந்த நான் மீண்டும் பூலோகம் செல்வதா? அதிலும், ஒரு மானிடனிடம் தோற்றுப்போவதா? ஐயோ.! இதை விட வேறென்ன கொடிய தண்டனையை நான் பெற முடியும்? தவங்களில் சிறந்தவரே.! என்னை மன்னியும், என்றான். தேவர்கள் எல்லாருமே கிரீடங்கள் தலையில் பதியும்படி அவர் காலில் விழுந்து கிடந்தனர். துர்வாசர் இதுகண்டு மனம் மாறினார். இந்திரனுக்கு தலைக்கு வந்தது முடியளவாகப் போகட்டும் என்றும், யானைக்கு நூறு ஆண்டுகள் கழித்து சாபம் மாறும் என்றும் கூறியருளியதால் இந்திரனுக்கு வந்த சாபம் முடியளவாக நீங்கியது.

யானை சொர்க்கத்தை விட்டுப் பூலோகத்தை வந்து, அங்கு கடம்ப வனத்தில் சோமசுந்தரப் பெருமானை வழிபட்டு வந்தது. சிவபெருமான் அதன் அன்பைப் பாராட்டி அதற்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார். யானை சிவனிடம்,

எம்பெருமானே.! இந்த வனத்தின் அழகில் நான் மெய்மறந்து விட்டேன். மேலும் தங்களைப் பிரிய எனக்கு மனமில்லை. நான் இந்த வனத்திலேயே இருக்கிறேனே.! தங்கள் விமானத்தை கருவறைக்கு மேலுள்ள கோபுரம் போன்ற அமைப்பு தாங்கும் யானைகளில் ஒன்றாக என்னையும் கொள்ள வேண்டும், என்றது.

சிவபெருமான் அதனிடம், ஐராவதமே.! இந்திரன் எனது பக்தன், அவனைச் சுமந்தால் என்னையே சுமப்பது போலாகும், நீ இந்திரலோகத்திற்கே செல், என்றார். மேலும், அதன் சுயவடிவத்தையும் தந்தார். அந்த யானைக்கோ கடம்பவனத்தை விட்டு செல்ல மனமில்லை. அது கடம்பவனத்தின் ஒரு பகுதிக்குச் சென்று அங்கிருந்த இந்திரேச்சுரர் என்ற லிங்கத்திற்கு பூஜை செய்து அங்கேயே தங்கி விட்டது.

வெள்ளை யானை வந்து தங்கிய அந்த இடத்துக்கு அதன் பெயரான ஐராவதநல்லூர் என்று அமைந்தது. பின்னர், இந்திரன் அந்த யானை பற்றி அறிந்து வந்து அதை அழைக்க வந்தான். சிவபெருமானிடம் யானையின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தான் எழுப்பிய விமானம் தன் பெயரால் இந்திர விமானம் என அழைக்கப்பட வேண்டும் என்றும், வெள்ளை யானை தன்னைத் தாங்குவது போல், அந்த விமானத்தையும் ஐராவதமே எட்டு வடிவங்களில் தாங்குவது போன்ற தோற்றம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அதன்படியே, எட்டு வெள்ளை யானைகள் மதுரை சொக்கநாதரின் விமானத்தை தாங்கியுள்ள காட்சியை இப்போதும் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here