ஆஞ்சநேயர் கதை

வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர், ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயருக்கு சுந்தரன் என்றும் ஒரு பெயர் உண்டு. ராமாயணத்தை எழுதிய வால்மீகி மகரிஷி அதை ஏழு காண்டங்களாக பிரித்தார். அனு மனுக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில் ஒரு காண்டத்தை சுந்தர காண்டம் என்று அவரது பெயரால் அழைத்து மகிழ்ந்தார்.

அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர். சீதாதேவியால் ‘சிரஞ்சீவி’ பட்டம் பெற்றவர். அவரது பிறப்பு மகத்துவம் மிகுந்தது. வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர், ஆஞ்சநேயர்.

திரேதாயுகத்தில் குஞ்சரன் என்ற சிவபக்தன் வெகுகாலமாக குழந்தை இல்லாமல் வருந்தினான். குழந்தைச் செல்வம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவம்புரிந்தான். அவன் முன் தோன்றிய ஈசன், ‘உனக்கொரு மகள் பிறப்பாள். அவளுக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் வலிமையும், வீரமும் பெற்று மரணம் இல்லாதவனாக வாழ்வான்’ என்று கூறி மறைந்தார்.

அவ்வாறே குஞ்சரனுக்கு ஒரு மகள் பிறக்க, அஞ்சனை என்று பெயரிட்டு வளர்த்தனர். அவள் பருவம் எய்ததும், கேசரி என்னும் வானர வீரனுக்கு அவளை மணமுடித்துக் கொடுத்தார் குஞ்சரன்.

ஒருநாள் அஞ்சனையின் முன்பு தர்மதேவதை தோன்றி, ‘பெண்ணே நீ வேங்கடமலைக்கு கணவனுடன் சென்று மகாதேவனை குறித்து தவம் செய். அவரருளால் விண்ணவர் போற்றும் மகன் பிறப்பான்’ என்றது. தேவதை கூறிய இடத்திற்குச் சென்ற அஞ்சனை, காற்றை மட்டும் உணவாகக் கொண்டு கடும் தவம் இருந்தாள். அவளது தவத்தைக் கண்டு வாயு தேவன் அதிசயித்தார். ஒரு முறை வாயு பகவான் சிவசக்தி வடிவான கனி ஒன்று, அஞ்சனையின் கைகளிலே வந்து தங்கும்படி செய்தார்.

அந்தக் கனியை உண்ட சில தினங்களில் அவள் கருவுற்றாள். அப்போது ஒரு அசரீரி எழுந்தது. ‘அஞ்சனா தேவி! சிவனுக்கும், சக்திக்கும் ஏற்பட்ட சிவசக்தி வடிவமான அம்சத்தை சிவனின் ஆணைப்படி, வாயுதேவன் கனி உருவில் உன்னை உண்ணச் செய்தான். உனக்கு சிவசக்தி அம்சம் கொண்ட மகன் பிறப்பான். அவன் வாயுபுத்திரன் என்று அழைக்கப்படுவான். விண்ணும் மண்ணும் அவனைப் போற்றி புகழும்’ என்றது.

அரண்மனைக்குத் திரும்பிய அஞ்சனை, நடந்தது பற்றி தனது கணவர் கேசரியிடம் கூறினாள். மாதங்கள் பல கடந்தன.
ஒரு மார்கழி மாதம் மூல நட்சத்திரம் கூடிய நன்னாளில் அஞ்சனாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அஞ்சனாதேவியின் மகன் என்பதால், அவர் ஆஞ்சநேயர் என்று அழைக்கப்பட்டார்.

வனவாசம் வந்த ஸ்ரீராமனுக்கு, எந்தவித பிரதிபலனையும் கருதாமல் தூய அன்புடனும், பக்தியுடனும் தொண்டு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here