பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையா?

மலேசியாவில் அரசியல் நிலவரம் நாளுக்கு நாள் பூகம்பமாக வெடித்துக் கொண்டிருக்கும் வேளையில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையா என்ற கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018இல் நடந்த பொதுத்தேர்தலில் துன் டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி அமைத்தது.

அறுபது ஆண்டுகளாக அசைக்க முடியாமல் இருந்த அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சியை மக்கள் வீழ்த்தினார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், முகமட் சாபு, லிம் குவான் எங் உட்பட அரசியல் ஜாம்பவான்கள் இடம்பெற்ற பிரதமர் துன் மகாதீர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி 22 மாதங்களில் வீழ்ந்தது.
மலேசிய அரசியலில் எந்தவோர் ஆட்சியும் 22 மாதங்கள் கவிழ்ந்தது இல்லை. பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் ஏற்பட்ட உட்பூங்லால் பெர்சத்து கட்சி வெளியேறியதால் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்தது.

டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் ஆகும் நிலையில் அந்தக் கூட்டணிக்கு உண்மையிலேயே பெரும்பான்மை இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மே 18ஆம் தேதி நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு 114 உறுப்பினர்கள் ஆதரவு இருந்ததாகக் கூறப்பட்டது.

ஆனால் சரவாக் பெர்சத்து கட்சியைச் சேர்ந்த ஸ்ரீஅமான் நாடாளுமன்ற உறுப்பினர் மாசிர் குஜாட், தாம் பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர் என அறிவித்தார். இதனால் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் ஆதரவு 113ஆகக் குறைந்தது.

அன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பக்கம் 109 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

ஸ்ரீஅமான் நாடாளுமன்ற உறுப்பினர் வருகையால் இந்த எண்ணிக்கை 110ஆக உயர்ந்திருக்கும் வேளையில் டான்ஸ்ரீ முஹிடினுக்கு இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பெரும்பான்மையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அலோர்காஜா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமட் ரிடுவான், ஜோகூர் ஸ்ரீகாடிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஷாருடின் முகமட் சாலே ஆகியோர் எந்த நேரத்திலும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்து விலகலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இவர்கள் இருவரும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை என்றாலும் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் துன் டாக்டர் மகாதீரை அவரின் இல்லத்தில் சந்தித்திருப்பது அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது.

இவர்கள் இருவரும் துன் மகாதீர் பக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல் மதுபான விவகாரம் தொடர்பில் பாஸ் கட்சியின் கூற்றினால் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த கட்சிகள் வெறுப்படைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நோன்புப் பெருநாளுக்கு முன்னதாகவே சரவாக் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் துன் மகாதீரை சந்தித்து ஆதரவு வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் அம்னோவின் கை ஓங்கியிருக்கும் வேளையில் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ் மௌனமாக இருப்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

இதனிடையே ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்குத் திரும்ப முடிவெடுத்துள்ளனர்.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் ஜோகூர் மாநில மந்திரி பெசார் பதவி பெர்சத்து கட்சிக்கு வழங்கப்பட்டது. ஆனால் இன்று அந்தப் பதவியை அம்னோ எடுத்துக் கொண்டிருப்பதால் பெர்சத்து உறுப்பினர்கள் வெறுப்படைந்துள்ளனர்.

அதேபோல் கெடா மாநிலத்திலும் பாஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தலைமையிலான அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு பாஸ் தலைமையிலான அரசு அமைந்துள்ளது.

மலாக்காவில் தற்போது அரசியல் புயல் வீசிக் கொண்டிருக்கிறது. பெர்சத்து கட்சியைச் சேர்ந்த பாயா ரும்புட் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் ரஃபிக், பெங்காலான் பத்து ங்ட்டமன்ற உறுப்பினர் டத்தோ நொரிஸாம் ஹசான் உட்பட ஜசெக, கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த தலா ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீண்டும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்குத் திரும்ப முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆகவே மத்தியில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி மீண்டும் திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ஓங்கியிருக்கும் வேளையில் ஜோகூர், கெடா, மலாக்கா ஆகிய மாநிலங்களில் மீண்டும் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாங்மடைந்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here