ஜாசின் –
எம்சிஓ உத்தரவு அமல்படுத்தப்பட்ட காலத்தில் மோட்டார் சைக்கிள்களில் உணவு விநியோகிப்பதுபோல பாசாங்கு செய்த சிலர் போதைப்பொருளைக் கைமாற்றும் நடவடிக்கையிலும் சம்பந்தப்பட்டிருந்தனர் என்று மலாக்கா மாநில சுகாதார போதைப்பொருள் ஒழிப்புத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ரமாட் மாரிமான் தெரிவித்தார்.
போதைப் பித்தர்களுக்கு அவர்கள் இவ்வாறு போதைப் பொருளை விநியோகம் செய்திருக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம் தொடங்கி உணவுப் பொருளை விநியோகிப்பதுபோல பாசாங்கு செய்து அவர்கள் சாலைத் தடுப்புச் சோதனையையும் கடந்து சென்றது தெரிய வந்துள்ளது. சொந்தமாகத் தயாரிக்கப்படும் உணவுகளை விநியோகம் செய்வதாகக் கூறிக் கொண்ட சிலர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணைகளில் இது தெரிய வந்துள்ளது என்று அவர் மேலும் சொன்னார். ஜாசின் மாவட்ட போதைப்பொருள் தடுப்புத்துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கோவிட்-19 விழிப்புணர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதனைச் சொன்னார்.
மலாக்காவில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கி நேற்று வரை போதைப்பொருள் தடுப்புச் சோதனையில் 122 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுள் 103 பேர் போதைப்பித்தர்கள் ஆவர்.
மலாக்காவில் 65 பேரும் அலோர்காஜாவில் 42 பேரும் ஜாசினில் 15 பேரும் கைதாயினர்.