உயர் கல்வி நுழைவுத் திட்டத்தில் மேல்முறையீட்டிற்கு இடமில்லை – மாணவர்களின் நிலை கேள்விக்குறி!

கடந்தாண்டு எஸ்பிஎம் முடித்த மாணவர்களின் 2020/2021 கல்வி ஆண்டிற்கான உயர்கல்வி விண்ணப்பத்திற்கான விண்ணப்ப முறையை கல்வி அமைச்சு ஒருமுகப்படுத்தியிருப்பதுடன் வழங்கப்பட்ட பயற்சிகளை மாற்றி கேட்டு முறையீடு செய்ய முடியாது என்ற முடிவால் பெரும்பாலான மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்

குறிப்பாக இந்திய மாணவர்களில் பலர் முன்னுரிமை தந்து விண்ணப்பித்த உயர்கல்விக் கூடங்களைத் தவிர்த்து அடுத்தடுத்த அல்லது இறுதித் தேர்வாக இருந்த உயர்கல்விக் கூடங்களில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு மெட்ரிகுலேஷனை முதல் தேர்வாக தேர்வு செய்துள்ள 9ஏ பெற்ற ஒரு மாணவி அவர் இறுதித் தேர்வாக குறிப்பிட்டுள்ள போலி டெக்னிக்கில் வாய்ப்பு வழங்கியுள்ளது. மெட்ரிகுலேஷனில் சிறப்புத் தேர்ச்சி பெறுவதன் வழி பட்டயக் கல்வியைத் தொடர வேண்டும் என்று நினைத்த அம்மாணவிக்கு பட்டயக் ( டிப்ளோமா) கல்விக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

தன்னுடைய நிலையை சரி செய்யவும் அம்மாணவிக்கு எத்தகைய மாற்று வழியும் இம்முறை கல்வி அமைச்சு வழங்கவில்லை.எத்தகைய பயிற்சிக்கும் அழைக்கப்படாத மாணவர்களே மேல் முறையீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் மற்றவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சிகளை தொடர வேண்டும் என்பதை இப்புதிய திட்டத்தின் முடிந்த முடிவான முடிவாகும்

கடந்த காலத்தில் பொதுப் பல்கலைக்கழகம்,மெட்ரிகுலேஷன் ஆசிரியர் பயிற்சிக் கழகம் மற்றும் போலிடெக்னிக்களுக்குத் தனித்தனியே மாணவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் அவ்வாறு செய்வதால் ஒரே மாணவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன.இத்திட்டத்தால் ஒரு பயிற்சியை அம்மாணவர் தேர்வு செய்த பின்னர் கைவிடும் மற்ற பயிற்சிகளுக்கு புதிய மாணவர்களை தேர்வு செய்யும் பணிச்சுமை கல்வி அமைச்சு ஏற்பட்டதால் அச்சூழலைத் தவிர்க்க முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் காலத்தில் இப்புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டது.

இப்புதிய திட்டம் பல இடர்களையும் கால விரயங்களையும் தவிர்த்துள்ளது என்றாலும் மாணவர்களின் முதன்மைத் தேர்வுகளுக்கு வாய்ப்பளிக்காமல் பொருத்தமற்ற அல்லது பொருத்தம் குறைந்த கடைசித் தேர்வான பயிற்சிகளுக்கு வாய்ப்பளிப்பது பெரும் ஏமாற்றத்தையளிப்பதாக உள்ளது.

இத்தகைய இத்திட்டத்தால் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சிகளுக்கு விருப்பமின்றி படிக்க வேண்டும் அல்லது ஆறாம் படிவமான எஸ்டிபிஎம் கல்வியைத் தொடரவேண்டும் அல்லது தனியார் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் தங்களின் கல்வியைத் தொடர வேண்டும். தனியார் கல்விக்கூடங்களில் கல்வியைத் தொடர்வது சிலருக்கு சாத்தியமாக இருக்கலாம்.

ஆனால் குறைந்த வருமானம் பெறும் பெரும்பாலான மக்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பதை கல்வி அமைச்சு எண்ணிப்பார்க்க வேண்டும்.

இதற்கிடையே மெட்ரிகுலேஷனில் இந்தியர் மாணவர்களுக்கு எத்தனை இடங்கள் வழங்கப்பட்டன என்ற விவரங்கள் கேள்விக்குறியாகியுள்ளது. இந்திய மாணவர்களுக்கு புதிதாக ஏற்பட்டுள்ள இப்பிரச்சினைக்கு யார் தீர்வு காண்பது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here