பாவத்தைச் சுமக்கப் போகிறீர்களா?

பி.ஆர். ராஜன்

வீட்டில் வைத்து பூஜைகள் செய்து வணங்கிடும்  சாமி சிலைகளை குப்பையில் கொண்டுபோய் சேர்ப்பது, கண்ட இடங்களில் தூக்கி எறிவது இதயத்தை வலிக்கச் செய்யும் ஒரு கொடூரச் செயலாக இருக்கிறது.

தெருவோரங்களில் கடைவீதிகளில் வீசப்பட்டு வந்த தெய்வச் சிலைகள் இப்போது கடற்கரை ஓரங்களிலும்  கைவிடப்படுகிறது.  குறிப்பாக,  போர்ட்டிக்சன் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்புறமுள்ள கடற்கரைப் பகுதியில் இந்த அவலங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

சுற்றுப்பயணிகளிடையே பிரபலமாகி இருக்கும் போர்ட்டிக்சன் கடற்கரைக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளுக்கு மத்தியில் இது கண் உறுத்தலை மட்டும் ஏற்படுத்தாமல் இந்து சமய வழிபாட்டு முறைகள் குறித்து கேள்வி எழுப்பும் நிலையை ஏற்படுத்துகிறது.

அதேசமயம் சடங்கு – சம்பிரதாயங்கள் செய்வதற்கு விடியற்காலையில் கடற்கரைக்கு வரும் நம்மவர்கள் சடங்குகள் முடிந்ததும் உடன் கொண்டு வந்த சடங்குப் பொருட்களை அங்கேயே விட்டுச் செல்கின்றனர்.

ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தும் இவற்றை அதில் போடுவதில்லை.  மாறாக,  சாங்கியம் நடக்கின்ற இடத்திலேயே அப்படியே விட்டுச் செல்கின்றனர். இது இயற்கைக்குச் செய்யக்கூடிய மிகப் பெரிய தீங்காகும்.

மனிதர்கள் மன்னிக்கலாம். ஆனால், இயற்கை மன்னிக்கவே மன்னிக்காது. ஏதாவது ஒருவகையில்  இந்த கர்ம வினைக்கு சம்பந்தப்பட்டவர்கள் விலைகொடுத்தே ஆகவேண்டும்.

போர்ட்டிக்சன் நகராண்மைக்கழக அமலாக்கப் பிரிவினர் எச்சரிக்கை அறிவிப்புகளை அங்கு வைத்திருக்கின்றனர். அதனையும் இவர்கள் மதிப்பதில்லை.  அலட்சியம்தான் இவர்களின் இந்த அழிச்சாட்டியங்களுக்கு மூலக் காரணமாக இருக்கின்றன.

நம்முடைய சமய சம்பிரதாயங்களுக்கு மதிப்புக் கொடுக்கும் வகையில் மற்ற இனத்தவர்கள் பணிபுரியும் நகராண்மைக்கழக அமலாக்கப் பிரிவு இந்தக் கொடுமைகளையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கிறது.

பொறுமை  இழக்கும் பட்சத்தில்  இந்த இடத்தில்  சாங்கியங்கள் செய்யக்கூடாது என்று தடைவிதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அமலாக்கப் பிரிவினரின் பொறுமையை நாம் அவர்களின் பலவீனமாகக் கருதிவிடக்கூடாது.

அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினால் பாதிப்பு நமக்குத்தான். ஏற்கெனவே, பல இடங்களில் நமக்கு முறையான  கர்ம காரிய சடங்குகள்  செய்வதற்குரிய இடங்கள் இல்லை.  தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால்,  இங்கு இந்திய சமுதாய மக்களுக்கு குறிப்பாக இந்துகளுக்கு இந்த வாய்ப்புகள் முறையாக செய்து தரப்பட்டுள்ளன.  விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றுவதில் என்னதான் பிரச்சினை?

ஸ்ரீஆஞ்சநேயர் ஆலயத் தலைவர் பெ. ஜெகநாதன் தலைமையில் ஆலய நிர்வாக உறுப்பினர்களும்  பணியாளர்களும்  ஒவ்வொரு நாளும் இந்தப் பகுதியைச் சுத்தம் செய்து களைப்படைகின்றனர்.

இந்நிலை இப்படியே நீடித்தால் இந்த ஆலயத்திற்கும்  பிரச்சினைகள் வரும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொண்டு சரியாக நடந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

ஸ்ரீதஞ்சோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கு. ராஜசேகரன் இங்கு வருகை புரிந்து கள ஆய்வை மேற்கொண்டு மனம் நொந்து போனார். இவர்கள் மாறவே மாட்டார்களா என்று வேதனையுடன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மனத்தை வருத்தும் இச்செயலுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கு சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். போலீஸில் புகார் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும் வகை செய்யப்படும் என்று  அவர் கூறியிருக்கிறார்.

சடங்குகள் செய்ய வருகின்றவர்கள் பூஜைப் பொருட்களை,  உடைகளை, திருஷ்டி கழிப்பதற்காகக் கொண்டு வரப்படும் பூசணி, படையல் பொருட்கள் அனைத்தையும் அப்படியே விட்டுச் செல்கின்றனர். இவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

அங்கு இரவு வேளைகளில் மாந்திரீக வழிபாடு நடப்பது இன்னோர் அதிர்ச்சித் தகவல். தங்களுக்கு வேண்டாதவர்களின் புகைப்படம் வைத்து அவற்றின் மீது எலுமிச்சங்கனி, குங்குமம் போன்ற சில பொருட்களை வைத்து மாந்திரீகம் செய்திருப்பதற்குரிய தோரணையை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

ஆலயத்திற்கு முன் உள்ள கடற்கரையில் இதையெல்லாம்  செய்யலாமா? சிந்திக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து திருந்த வேண்டும். நம் வழிபாட்டு முறைகளை, சடங்கு சம்பிரதாயங்களை நாமே மதிக்கவில்லை என்றால் வேறு யார் தான் மதிப்பர்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here