தென்கிழக்கு ஆசியாவில் முதன் முதலில் தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்கள் (The Straight Settlement) பகுதிகளில்தான் தமிழ்ப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. 1816இல் (The Prince of Wales) என்கிற ஐரோப்பிய மாநிலத்தை சேர்ந்த ஆங்கில பாதிரியார் திரு ரெவ். ராபர்ட் ஸ்பார்க் ஹட்ச்சிங்ஸ் என்பவர் பினாங்கு ப்ரீ ஸ்கூல் என்கிற ஆங்கில பள்ளியை பினாங்கு தீவில் தொடங்கினார்.
தென்கிழக்கு ஆசியாவின் முதல் ஆங்கில பள்ளி என்கிற பெருமையும் வரலாறும் இந்த பள்ளியையே சாரும். தமிழ் கல்விக்கான விதை இந்த பள்ளியில்தான் விதைக்கப்பட்டது.
21 அக்டோபர் 1816இல் Penang Free School தொடங்கப்பட்டது. இதே ஆண்டில் இந்த ஆங்கில பள்ளியில் ஒரு பிரிவாக தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. இதுவே நமது நாட்டின் முதல் தமிழ்ப்பள்ளி. தமிழ்க்கல்வியின் தொடக்கம்.
1816இல் தொடங்கப்பட்ட தமிழ்வகுப்பு போதிய ஆதரவு இல்லாததால் 1818இல் இதமிழ் வகுப்பு மூடப்பட்டது. இதனையடுத்து 1834இல் சிங்கபூர் ப்ரீ ஸ்கூல் தமிழ்வகுப்பு தொடங்கப்பட்டு, போதிய ஆதரவு இல்லாமல் 1839இல் மூடப்பட்டது.
1850இல் மலாக்காவில் ஆங்கிலேயத் தமிழ்ப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. இதுதான் மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி. இது குறித்த தகவல்கள் அதிகம் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் இதுவும் சில ஆண்டுகளில் போதிய ஆதரவு இல்லாமல் மூடப்பட்டது.
1859இல் சிங்கப்பூரில் செயிண்ட் பிரான்சிஸ் சேவியர் மலபார் பள்ளியில் தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. தொடர்ந்து 1895இல் கிருஸ்தவ பாதிரியார் தவத்திரு ஆப்ரஹாம், கோலாலம்பூர், செந்தூலில் 1895இல் ஆங்கிலேத் தமிழ்ப்பள்ளியைத் தொடங்கினார்.
பின்னர் 1897இல் இப்பள்ளி மெத்தடிஸ்ட் ஆண்கள் பள்ளியானது. 1870இல் பிறகு புரவின்ஸ் வெலஸ்லி என்று அழைக்கப்பட்ட செபராங் பிறை, மலாக்கா, நெகிரி செம்பிலான், வட ஜொகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள தோட்டங்களில் தமிழ்ப்பள்ளிகள் உருவாகின.
இப்படிப் படிப்படியாக வளர்ந்து வந்த தமிழ்ப்பள்ளிகள் 1900களில் சில இடர்பாடுகளை சந்தித்தது. கூட்டரசு மலாய் மாநிலங்கள் (Federated Malay States) கல்வி கண்காணிப்பாளர் ஜே. டிரைவர் 1901இல் தாய்மொழி வழிக் கல்வியை விரும்பவில்லை. குடியேற்றக்காரர்களின் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததனால் அவர்களுக்கெனத் தனிப்பள்ளிகள் தேவை இல்லை என்ற கருத்தினை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து சிலாங்கூர் மாநில ரெசிடெண்டாக இருந்த W.H. Treacher 1901இல் வெளியிட்ட அறிக்கையில், மலாய் பள்ளிகளுக்கான கல்வி செலவு தவிர மற்ற இனத்தவரின் தாய்மொழி கல்விக்கு அரசு பொறுப்பேற்காது என்று கண்டிப்பாக அறிவித்தார்.
1912இல் ஆங்கிலேயே அரசு அறிமுகப்படுத்திய Labour Ordinance தொழிலாளர் சட்டம் கட்டாய தமிழ்ப்பள்ளிகள் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. 7 முதல் 14 வயதுள்ள 10 பிள்ளைகள் இருப்பின், அத்தோட்ட நிர்வாகம் தமிழ்ப்பள்ளியை நிறுவ வேண்டும் என்று இச்சட்டம் வலியுறுத்தியது.
இதனால் வேறு வழியின்றி தோட்ட முதலாளிகள் தோட்டப்புறங்களில் வேலை செய்த தமிழ் குடும்பங்களுக்கு தமிழ்ப்பள்ளிகள் அமைத்து தர வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
1930 வரை 333 தமிழ்ப்பள்ளி மலாயாவில் அமைக்கப்பட்டது. தோட்ட நிர்வாகத்தைத் தவிர்த்து ஆங்கில அரசால் 1937 வரை 13 அரசினர் தமிழ்ப்பள்ளிகள் நிறுவப்பட்டிருந்ததை அறிய முடிகிறது.
சமய,சமூக,தனிநபர்களும் தமிழ்ப்பள்ளிகளை ஆங்காங்கே மலாயாவில் நிறுவத் தொடங்கினர். கோலாலம்பூரில் தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளியை 1905இல் ராஜசூரியா என்பவர் தொடங்கினார். விவேகானந்தா ஆசிரமம் 1914இல் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியை நிறுவியது.
1924இல் செந்தூலில் கத்தோலிக்க திருச்சபை செயிண்ட் ஜோசப் பெண்கள் தமிழ்ப்பள்ளியை நிறுவியது. இதே ஆண்டு சன்பெங் ரோடு தமிழ்ப்பள்ளியும் நிறுவப்பட்டது.
1937இல் தவத்திரு சுவாமி ஆத்மராம் அப்பர் தமிழ்ப்பள்ளியை நிறுவினர். இதே ஆண்டில் பங்சார் ரோடு தமிழ்ப்பள்ளியும் நிறுவப்பட்டது. 1930 முதல் 1937 வரை தமிழ்ப்பள்ளி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆங்கிலேயே அரசு தாய்மொழிப் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்க 1932இல் சிறப்பு செயற்குழுவை நிறுவியது.
இக்குழுவின் பரிந்துரையால், மாணவர்களின் வருகை பதிவையும் தேர்வு முடிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு தோட்ட நிர்வாகம் ஒரு மாணவருக்கு ஆறு வெள்ளி வழங்கியது. 1935க்கு பிறகு இது எட்டு வெள்ளியாக உயர்த்தப்பட்டது.
தமிழ்ப்பள்ளிகளின் நிலையை மேம்படுத்த 1930இல் முதன் முறையாக ஆங்கில அதிகாரியான ஜி.ஆர். பில்வர் தமிழ்ப்பள்ளிகளை கண்காணிக்கும் பொறுப்புக்கு(Inspectorate of Tamil Schools) நியமிக்கப்பட்டார்.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஆங்கிலேய தாய்மொழி கல்வியில் அதிக கவனம் செலுத்தியது. இதற்கென 1946ம் ஆண்டு கல்விச்சட்டம் நடப்பில் வந்தது. ஆனாலும் தமிழ்ப்பள்ளிகள் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக அமைந்தது 1951இல் வெளியிடப்பட்ட பெர்னஸ் ஆய்வறிக்கை.
(Report of the Committee on Malays Education, Federation of Malaya) 1951 என்கிற பெயரில் வெளியிடப்பட்ட இந்த இந்த அறிக்கை, மலாய் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகள் மட்டுமே மலாயா பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்தது.
மலாயா தமிழர்கள் பெர்னஸ் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சைவப்பெரியார் க ராமநாதன் செட்டியார், திருமிகு ஆதிநாகப்பன், தவத்திரு சுவாமி சத்தியானந்தா, அப்போதைய மா இ கா தலைவர் திருமிகு தேவாசர் ஆகியோர் கொண்ட கல்வி குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இக்கல்வி குழு தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து இருக்கவேண்டும் என்றும்; 5ஆம் ஆண்டு வரை தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், 6ஆம் ஆண்டில் ஆங்கிலம் பயிற்று மொழியாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. ஆனால் இந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
கல்வி சட்டத்தில் பல சிக்கல்கள் எழுந்ததை தொடர்ந்து 1956ஆம் ஆண்டில் அப்போதைய கல்வி அமைச்சர் துன் ரசாக் தலைமையில் கல்விக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்கல்வி குழு 6.5.1956இல் கல்வி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அவ்வறிக்கையே எல்லோராலும் அறியப்பட்ட (Laporan Razak) 1956 ஆகும்.
இந்த அறிக்கையின் வழி இரு வகை தேசியப்பள்ளிகள் அமைந்தன. மலாய்மொழியை பயிற்றுமொழியாக கொண்ட பள்ளிகள் (Standard Primary School) என்றும் ஆங்கிலம் தமிழ் சீனம் ஆகிய மொழிகளை பயிற்று மொழியாக கொண்ட பள்ளிகள் Standard Type Primary School என்றும் வகைப்படுத்தப்பட்டன. இந்தத் திட்டத்திற்குப் பிறகு தமிழ்ப்பள்ளிகள் வலுவாக காலூன்ற வழி வகுத்தது.
1957இல் நாடு சுதந்திரம் பெரும் தருவாயில் 888 தமிழ்ப்பள்ளிகள் நமது நாட்டில் செயல்ப்பட்டு வந்தது. தமிழ்ப்பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள் இந்தியா இலங்கை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யாமல், இந்நாட்டு சூழலைப் பின்னனியாக கொண்டு உள்நாட்டு எழுத்தாளர்களால் தயாரித்து வழக்கப்பட்டன.
தமிழ்க்கல்வி ஆரம்பத் தமிழ்ப்பள்ளிகளில் பல இடர்பாடுகளிடையே வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில் கல்லூரி மற்றும் பல்கலைகழக நிலையிலும் தமிழ்க்கல்வி வளர்ந்து வந்தது.
ஆரம்பகாலத்தில் ’ஆயத்த ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பிறகு 1960களுக்கு பிறகு (Day Trainning College) நாள் பயிற்சிக் கல்லூரிகளில் முழு நேர தமிழ் ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. 1976இல் முதன் முதலாக ஸ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் தமிழ்ப்பள்ளிகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 1999 வரை எட்டு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. நாட்டில் இயங்கி வரும் பல்கலைகழங்களில் மலாயா பல்கலைகழகமே முதலில் தோற்றுவிக்கப்பட்டதாகும்.
இப்பல்கலைக்கழகம் 1949ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. விடுதலைக்கு பின்னர் 1962ஆம் ஆண்டில் முழுமையாக கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் 1956இல் முதல் கலை சமூகவியல் புலத்தில் இந்திய ஆய்வியல் துறையின் கீழ் தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது.