தோன்றி மறையும் நம்பர்கள்

பெரிக்காத்தான் நேஷனலிடமிருந்து மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் “நம்பர்கள்” (எம்பிகள் எண்ணிக்கை) தம்மிடம் இருக்கிறதா இல்லையா என்பது தமக்குத் தெரியவில்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

“நம்பர்கள்” தோன்றி மறைகின்றன. எங்களுக்குத் தெரியவில்லை. டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பிரதமராகப் பதவியேற்றபோது அவருக்குப் போதுமான பெரும்பான்மை இல்லை என்பது மட்டும் எங்களுக்குத் தெரியும் என்று புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா லீடர்ஷிப் அறவாரியத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

மார்ச் 1ஆம் தேதி டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பதவியேற்றபோது 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தங்கள் வசம் 114 பேர் இருந்ததாக அவர் சொன்னார்.

என்னுடைய ஆதரவாளர்களுக்கு அத்தரப்பில் இருந்து அழைப்பு வருகிறது. பதவிகளைக் காட்டி வலை வீசப்படுகிறது. அவர்களுக்குப் பதவி மேல் மோகம் வந்து விடுகிறது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

நல்ல வருமானம் தரக்கூடிய பணிகள் அல்லது பதவிகள் அவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின்போது பெரும் எண்ணிக்கையிலான அரசாங்க நிறுவனங்கள், நிபுணர்கள், கல்விமான்கள் பதவிகளில் அமர்த்தப்பட்டனர்.

ஆனால், பெரிக்காத்தான் நேஷனல் பொறுப்பேற்றதும் இவர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர். அந்த இடங்களில் அரசியல்வாதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று துன் டாக்டர் மகாதீர் கூறினார்.
அரசு தொடர்புடைய நிறுவனங்களை (ஜிஎல்சி) சுட்டிக்காட்டி அவர் பேசினார்.

இதனிடையே, இப்போதைக்கு பொதுத்தேர்தல் நடத்தப்படும் சாத்தியம் உள்ளதா என்ற ஒரு கேள்விக்கு, கோவிட்- 19 நிலைமையைப் படுமோசமாக்கியிருக்கிறது. பொதுத்தேர்தல் என்றால் கூட்டம் என்றே அர்த்தமாகும் என்றார்.

அதேவேளையில் பொதுத்தேர்தல் என்றாலே கோடிக்கணக்கில் பணம் செலவாகும். அரசாங்கத்திற்குப் பணம் இப்போது தேவைப்படுகிறது.

தேர்தல் என்ற பெயரில் கவனம் திசைத் திருப்பப்பட்டால், பாதிக்கப்படப் போவது மக்கள்தான் என்று அவர் மேலும் தெரிவித்தார். பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் பக்காத்தான் ஹராப்பானின் வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்ற ஒரு கேள்விக்கு, எனக்குத் தெரியாது. மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்று துன் மகாதீர் பதில் அளித்தார்.

ஜசெக மலாய்க்காரர்களை எப்படி நாசப்படுத்தியது என்ற பயமூட்டும் கதைகள் எல்லாம் சொல்லப்பட்டது. அது தற்போது எல்லாவற்றையும் இழந்து விட்ட டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக்கின் பிரச்சாரம் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here