துன்பமே போ, நன்மையே வா என்றுதான் இன்பத்தைக் கைக்கூப்பியும் சலாம் சொல்லியும் மக்கள் வரவேற்பார்கள். இன்றைய நிலைமை அப்படியில்லை. துன்பமே! துயர் கொடுக்காதே! என்று கொஞ்சம் இறங்கியிருக்கின்றனர்.
இதில், மகிழ்ச்சி தானாகவே ஒதுங்கியிருக்கிறது என்பதை உணரமுடிகிறது. எல்லைக்கோடு ராமர் போட்ட கோடுபோல் அழியாமல் இருக்கிறது. அதை மீறும் சக்தி மகிழ்ச்சிக்கு வரவில்லை என்றால், துன்பத்தின் பிடியில் மக்கள் ஆழமாக சிக்கிக் கிடக்கின்றனர் என்பது பொருளாகும்.
துன்பம் வந்துவிட்டது என்பதற்காக தூக்குப்போட்டுக்கொள்ள முடியாது. துன்பத்தை விரட்ட காலம் பிடிக்கும் என்று உணரப்பட்டிருக்கிறது. அதற்காக சிவனே என்றும் சும்மா இருந்துவிடவும் முடியாது.
துன்பம் தனியொருவரைத் தாக்கவில்லை. ஓரினத்தைத் தாக்கவில்லை. மதத்தை குறிவைக்கவில்லை. ஒட்டுமொத்த மக்களைக் குறிவைத்துப் புரட்டிப்போட்டிருக்கிறது. இதுகண்டு பயந்த மக்கள் இன்று அதை எதிர்க்கும் நிலைக்கு ஆளாகிவிட்டனர் என்பது கதை என்று எடுத்திக்கொள்ள முடியாது.
கொரோனா கற்றுக்கொடுத்த பாடம் மிகப்பெரியது. பேராசிரியராக, கொரோனா வந்திருக்கிறது. கொரோனா வந்ததன் நோக்கம் எதுவாகவும் இருக்கலாம். அது கற்றுக் கொடுத்ததோ வாழ்க்கைப்பாடம். இதுபோன்ற பாடத்தை இதற்குமுன் மக்கள் படித்ததேயில்லை. மாணவர்களும் படித்ததில்லை. அரசும் படித்ததில்லை.
கொரோனா என்பது ஒரு பல்கலைக்கழகம். மக்கள் அனைவருமே பட்டதாரிகள். பண்பட்டதாரிகள். துன்பப்பட்டதாரிகள், அனுபவ, பக்குவப் பட்டதாரிகளாக மாறியிருக்கின்றனர்.
பேராசியராக இருந்த கோரோனா துயர் கொடுத்திருப்பதாக மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் மக்கள், இன்று அதன் மறுபக்கத்தைப் பார்க்கிறார்கள். அதன் மறுபக்கம் மாறுபட்டிருக்கிறது. மாறுபட்ட நிலையில் வாழ்க்கை நடத்தும் செய்முறை பயிற்சியில் மக்கள் அனைவரும் மாறியிருக்கிறர்கள். தேர்ந்திருக்கிறார்கள். அனைவருக்கும் நீச்சல் வருகிறது. எந்தத் துன்பக்கடலில் வீழ்ந்தாலும் கரை ஏறமுடியும்!
மாற்றம் ஒன்றே மாறாதது.