அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலம், மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கருப்பினரான ஜார்ஜ் பிளாய்டு என்பவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டார். கருப்பினர் கொல்லப்பட்டதற்கு நீதி வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கருப்பின மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக கருப்பினத்தவர்கள் அடக்குமுறையை சந்தித்து வருவதால் இந்த போராட்டம், நாடு முழுவதும் இனவெறிக்கு எதிரான போராட்டமாக வலுவடைந்து வருகிறது. இதனால் பல்வேறு நகரங்களில் பதற்றம் நீடிக்கிறது.
அமெரிக்காவில் போராடி வரும் கருப்பின மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும், இனவெறிக்கு எதிராகவும் வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
அவ்வகையில் பிரிட்டனின் பிரிஸ்டால் நகரில் இனவெறிக்கு எதிராக நேற்று ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அத்துடன், கருப்பின மக்களை அடிமைப்படுத்தி வியாபாரம் செய்த எட்வர்ட் கோல்ஸ்டனின் சிலையை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி துறைமுகத்தில் உள்ள ஆற்றில் வீசினர்.
18 அடி உயர வெண்கலச் சிலையை கயிறு கட்டி கீழே தள்ளி, துறைமுகத்திற்கு உருட்டிச் சென்று சென்று ஆற்றில் தள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.