சோதனை மேல் சோதனை. துயரத்தில் தவித்த எங்களுக்கு ஆறுதல் கிடைத்தது

திருச்சியைச் சேர்ந்த மொத்தம் 55 பேர் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கையில் பணம் இல்லை. மருந்து, மாத்திரைக்கும் வழியில்லை. எங்களைக் காப்பாற்றுங்கள் என்று தமிழ்நாட்டில் திருச்சியை சேர்ந்தவர்கள் விடுத்திருந்த கண்ணீர்க் கோரிக்கையை மக்கள் ஓசை கடந்த மாதம் முதல் பக்கத்தில் சேய்தி வெளியிட்ட பிறகு மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகம் நடவடிக்கையில் இறங்கியதாக இவர்களுக்கு உதவி வரும் சமூகச் சேவையாளர் அமர்ஜிட் கோர் இன்று கூறினார்.

இவர்களுக்கு உதவ இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரியும் கோபியோ அனைத்துலக அமைப்பைச் சேர்ந்த ஏ. ரவீந்திரன் அர்ஜுனனும் உடனடி நடவடிக்கையில் இறங்கியதாகவும் அவர்களுக்குத் தாங்கள் நன்றிகூறக் கடமைப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சியைச் சேர்ந்த இவர்கள் பல சிரமங்களுக்கு ஆளாயினர். குறிப்பாகப் பெண்கள் நீரிழிவு, இருதயநோய், தைராய்டு, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு அதற்குரிய மருந்து மாத்திரைகளைப் பெறுவதிலும் சிரமத்தை எதிர்நோக்கினர். இவர்களுக்கு இயன்ற அளவு உதவிகளை இதுநாள் வரை வழங்கி வந்திருப்பதாக அமர்ஜிட் கோர் விவரித்தார்.

இவர்கள் கடந்த பிப்ரவரி மாத வாக்கில் மலேசியா வந்துள்ளனர். மார்ச் 19ஆம் தேதி அவர்கள் நாடு திரும்பவிருந்தனர். எனினும் கொரோனா நெருக்கடியால் விமானச் சேவைகள் முடக்கப்பட்டதால் இவர்கள் தமிழ்நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு பெரும் அவதிக்கு ஆளாயினர். இவர்களின் நிலை குறித்து மக்கள் ஓசை செய்தி வெளியிட்ட பிறகு இப்போது அவர்களுக்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது. நாளை முதல் கட்டமாக 28 பேர் நாடு திரும்ப உள்ளனர். அதன் பிறகு கட்டம் கட்டமாக நாடு திரும்ப இவர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் ஓசைகும் அமர்ஜிட் கோருக்கும் நன்றிகூற கடமைப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினர். இதுநாள் வரை மிகவும் சிரமப்பட்டு விட்டோம். எப்போது திருச்சிக்குத் திரும்புவோம் என ஏக்கத்துடன் காத்திருந்தோம். எப்படியாவது நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here