வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மகளிர் அமைச்சு RM33மில்லியன் நிதியை கோருகிறது- டத்தோ சித்தி ஜைலா தகவல்

பாசீர் மாஸ், டிசம்பர் 28 :

பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (KPWKM) இரண்டாவது அலை வெள்ளத்திற்குத் தயாராகும் வகையில், அத்தியாவசியப் பொருட்களை வாங்க RM33 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்ய, அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளது என்று அதன் துணை அமைச்சர் டத்தோ சித்தி ஜைலா முகமட் யூசாஃப் தெரிவித்தார்.

நிதி அமைச்சகத்தின் சேமிப்புக் கிடங்குகளில் விநியோகம் மற்றும் பகிர்ந்தளிக்கும் தளங்கள் குறைவாக இருப்பதால், கூடுதல் ஒதுக்கீடு கேட்டு தமது அமைச்சு நிதி அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்தது என்றார்.

இன்று காலை டத்தோ சித்தி ஜைலா தலைமையில் நடைபெற்ற மெய்நிகர் சிறப்பு வெள்ள ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்வைகள், பாய்கள், உலர் உணவுகள், ஒருமுறை பயன்படுத்தும் டயப்பர்கள் போன்றவற்றை வாங்க இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

“சபா மற்றும் சரவாக் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள மாநிலங்களில் உள்ள விநியோகத் தளங்களில் இந்த பொருட்கள் சேமிக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இன்று இங்குள்ள ரந்தாவ் பஞ்சாங்கில் கம்போங் தெர்சாங் மற்றும் லாஞ்சாங் ஆகிய இடங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

ரந்தாவ் பஞ்சாங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் சித்தி ஜைலா தொடர்ந்து கூறுகையில், பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, அமைச்சகம் கிளந்தானில் இருந்து பொருட்களை அனுப்ப வேண்டியிருந்தது மேலும் சிலாங்கூர் மற்றும் கெடா ஆகிய இருமாநிலங்களிலும் பொருட்கள் தீர்ந்துவிட்டது என்று கூறினார்.

இதற்கிடையில், சமூக நலத்துறை (ஜேகேஎம்) பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்றும் அவர்களில் பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சித்தி ஜைலா கூறினார்.

“தற்போது, ​​எங்களிடம் குறைந்த பணியாளர்களே உள்ளனர். எடுத்துக்காட்டாக, டெமெர்லோ, பகாங்கில் எங்களின் கண்காணிப்பின் கீழ் 88 தற்காலிக நிவாரண மையங்கள் உள்ளன, ஆனால் 37 JKM ஊழியர்கள் மட்டுமே உள்ளனர. அவர்களில் சிலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிலாங்கூரில் எங்களிடம் 47 பணியாளர்கள் உள்ளனர், ஆனால் 15 பேர் மட்டுமே பணியாற்ற கூடிய சூழ்நிலையில் உள்ளனர். இதன் காரணமாக, மற்றய முகவர்கள் மற்றும் தன்னார்வலர்களிடமிருந்து எங்களுக்கு உதவி தேவைப்படுகிறது, ”என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here