இந்த அரசாங்கத்தை கண்டு உலகமே சிரிக்கும் – துன் மகாதீர்

அம்னோவைச் சேர்ந்த அறுவரின் குற்றங்கள் நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்டால் டான்ஸ்ரீ முஹிடின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி கவிழும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

நஜிப் துன் ரசாக், அகமட் ஸாஹிட் ஹமிடி, தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம், அகமட் மஸ்லான், புங் மொக்தார் ஆகியோர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இவர்கள் குற்றம் புரியவில்லை என்பதை முஹிடின் தான் முடிவு செய்வார்.

புதிய கூட்டணியில் அம்னோ மற்றும் நஜிப்பை ஏற்றுக் கொள்ள முஹிடின் திட்டமிட்டுள்ள நிலையில், நஜிப், சில அம்னோ தலைவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தலையிடுவதில்லை என்று அவர் உறுதியளித்துள்ளார்.

தற்போது முஹிடினை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 114 மட்டுமே. அந்த எண்ணிக்கையில் பாதிக்கு 3 மட்டுமே வித்தியாசம்.

இந்த 6 பேரும் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டால், அவர்கள் இனி மக்களை பிரதிநிதிக்க மாட்டார்கள். எனவே முஹிடினின் ஆதரவாளர்கள் 108ஆக பாதிக்கும் குறைவாகவே இருப்பார்கள் என்று அவர் கூறினார்.

நஜிப்பின் வளர்ப்பு மகன் ரிசா அஸிஸ் மற்றும் முன்னாள் சபா முதல்வர் மூசா அமான் ஆகியோரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். நிச்சயமாக இந்த 6 அம்னோ தலைவர்களும் விடுவிக்கப்படுவார்கள். அப்படியானால் முஹிடின் தலை தப்பும்.

பின் கதவு வழியாக ஆட்சியை பிடித்த இந்த அரசாங்கம், சட்டங்களை விருப்பத்திற்கு மாற்றுவதை கண்டு உலகமே சிரிக்கும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here