நாங்களும் மீட்சியுற வாய்ப்பளியுங்கள் – மலேசிய இந்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சங்கம் கோரிக்கை

கோவிட் 19 நோய் தொற்றால் முற்றாக வருமானத்தை இழந்து நிற்கும் எங்களுக்கு மீண்டும் மீட்சியுற அரசாங்கம் வாய்ப்பளிக்க வேண்டும் என்று மலேசிய இந்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இத்தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற கடந்த மார்ச் மாதம் அரசாங்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தியது. அதன் பின்னர் நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கொண்டு வரப்பட்டது. கடந்த ஜூன் 9ஆம் தேதியுடன் முடிவடைந்த அந்த ஆணைக்கு பின்னர் 10ஆம் தேதி தொடங்கி மீட்சியுறும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வந்தது.

இந்த ஆணையின் போது நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வழக்க நிலைக்கு கொண்டு வர பல்வேறு தொழில்துறைகள் செய்லபட அரசாங்கம் அனுமதி வழங்கியது. எஸ்ஒபி எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை பின்பற்றி தொழில்துறைகள் செயல்பட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.

கோவிட் பாதிப்பிற்கு பிறகு மலேசியாவில் புதிய சூழல் ஏற்பட்டுள்ளது. அனைத்தும் வழக்க நிலைக்கு திரும்பியிருக்கும் வேளையில் தாங்கள் சார்ந்த துறைகளும் செயல்படுவதற்கு அரசாங்கம் வழி வகுக்க வேண்டும் என்று மலேசிய இந்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ கே.சிவகுமார் கேட்டு கொண்டார்.

கூட்டங்களை தவிர்க்க மக்கள் ஒன்றுக் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கு அரசாங்கம் இன்னும் அனுமதி வழங்கவில்லை. குறிப்பாக திருமணம் நிகழ்ச்சிக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் திருமணமாகவிருந்தவர்கள் மட்டுமின்றி அந்நிகழ்ச்சிகளை சார்ந்து இருக்கும் ஆயிரங்கணக்கான தொழில்துறைகள், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருமண மண்டபம், கெட்டரிங், முக ஒப்பனை, புகைப்படக் கலைஞர்கள், வீடியோ எடுப்பவர்கள், மண்டப அலங்கரிப்பாளர்கள், கூடாரம் போடுபவர்கள் உட்பட பல துறையினர் இன்று வருமானம் இல்லாமல் தத்தளித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதமாக வருமானம் இல்லாவிட்டாலும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.

தற்போது நாட்டில் கோவிட் 19 தொற்று கட்டுப்பாட்டில் இருக்கிறது. பல்வேறு தொழில்துறைகள் மீண்டும் செயல்பட தொடங்கி விட்டன. அதே போன்று நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும். அனைத்து துறைகளுக்கும் விதிக்கப்பட்டிருக்கும் எஸ்ஒபியை தாங்கள் சார்ந்த துறைகளும் விதித்து மீண்டும் செயல்பட அனுமதி வழங்கினால் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர முடியும்.

தங்கள் சங்கத்தின் சார்பில் எஸ்ஒபி ஒன்றை அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கின்றோம்:

மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் அந்நிகழ்ச்சிக்கு வருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்பு உடலின் வெப்ப அளவை கட்டாயம் சோதனை செய்ய வேண்டும். அதோடு வருகையாளர்களின் தகவல்களை சேகரிக்க கட்டாயமாக புத்தகத்தில் எழுத வேண்டும்.

பொதுவாக திருமணங்களுக்கோ விருந்து நிகழ்ச்சிக்கோ 1,000 மேசைகள் போடப்படும். ஆனால் இன்றைய சூழலில் கூட்டத்தை கட்டுப்படுத்த மண்டபத்தின் விசாலத்தை வைத்து மோசைகள் அமைக்கப்பட வேண்டும். அதோடு ஒரு மேசையில் நால்வர் மட்டுமே அமர வேண்டும். இதில் கூடல் இடைவெளியும் அடங்கும்.

அந்நிகழ்ச்சிக்கு வரும் புகைப்பட கலைஞர்கள், கெட்டரிங் உணவு ஏற்பாட்டாளர்கள், மண்டப அலங்கரிப்பாளர்கள், வருகையாளர்கள் உட்பட அனைவரும் இந்த விதி முறைகளை பின்பற்ற வேண்டும். உணவு ஏற்பாட்டளர்கள் கட்டாயம் கையுறை அணிந்திருக்க வேண்டும். அதோடு வருகையாளர் உணவுகளை எடுக்கும் போது கூடல் இடைவெளி கட்டாயம் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

கோவிட் தொற்றால் பேரிடி விழுந்த துறைகளில் ஒன்றான கூடாரம் அமைக்கும் சேவை மீண்டும் மீட்சிப் பெற இந்த எஸ்ஒபி திட்டத்தில் அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.

ஒரு கூடாரத்திற்கு 3 மேசைகள் என இடைவெளி விட்டு அமருவதற்கு அவர்கள் வழி செய்ய வேண்டும். முக ஒப்பனை கலைஞர்கள் முகக் கவசம், கையுறை கட்டாயம் அணிய வேண்டும். ஒருவருக்கு ஒப்பனை செய்த பின்னர் அதே தூரிகையை கொண்டு மற்றவர்களுக்கு ஒப்பனை செய்யக் கூடாது. அதன் மாற்று திட்டங்களை அவர்கள் கையாள வேண்டும். பொதுவாக மேடையில் 10 அல்லது 12 நடனக் கலைஞர்கள் நடனமாடுவர் ஆனால் இன்றைய நிலைக்கு 3 அல்லது 4 பேர் ஆடினால் சிறப்பாக இருக்கும். அதே சமயம் தொடுதல் முறை இல்லாமல் ஆடுவது சிறப்பு.

மேலும் இந்த எஸ்ஒபிகள் அனைவரும் முறையாக பின்பற்றுவதை உறுதிப் படுத்த மண்டபங்களில் அதிகாரி ஒருவரை வேலைக்கு அமர்த்துவது மிகச் சிறப்பானதாக அமையும்.

இந்த பரிந்துரைகளை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனிடம் நாளை வழங்கவிருக்கிறோம். இது தான் எங்களின் வாழ்வாதாரம். இதை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் இருக்கின்றனர். எனவே அரசாங்கம் இவற்றை சீர்தூக்கி பார்த்து நல்ல பதில் அளிக்க வேண்டும் என்று டத்தோ சிவகுமார் கேட்டு கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here