இந்தியாவை விட பாகிஸ்தான், சீனாவிடம் அதிக அணுஆயுதங்கள் உள்ளன

சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பு, ஆண்டுதோறும் அணு ஆயுத நிலவரம் தொடர்பாக தகவல்களை திரட்டி அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உலக அளவில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 அணுஆயுத நாடுகள் உள்ளன. இந்த நாடுகளிடம் உள்ள மொத்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 400 ஆகும். இது, கடந்த ஜனவரி மாத நிலவரம் ஆகும்.

கடந்த ஆண்டு இந்த நாடுகளிடம் மொத்தம் 13 ஆயிரத்து 865 அணு ஆயுதங்கள் இருந்தன. மிகவும் பழையதாகி விட்ட ஆயுதங்களை அமெரிக்காவும், ரஷியாவும் அழித்து விட்டதால், மொத்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

உலக அளவில், ரஷியா 6 ஆயிரத்து 375 அணு ஆயுதங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 5 ஆயிரத்து 800 அணு ஆயுதங்களை வைத்துள்ளது. இந்த இரு நாடுகளும் உலகின் மொத்த அணு ஆயுதங்களில் 90 சதவீதத்தை வைத்துள்ளன.

இந்தியா, கடந்த ஆண்டு 140 அணு ஆயுதங்களை வைத்திருந்தது. ஓராண்டில் 10 அணு ஆயுதங்களை அதிகரித்துள்ளது. இருப்பினும், சீனா, பாகிஸ்தானை விட இது குறைவுதான். சீனாவிடம் 320, பாகிஸ்தானிடம் 160 என்ற எண்ணிக்கையில் அணு ஆயுதங்கள் உள்ளன.

சீனா தனது அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி வருகிறது. நிலம் மற்றும் கடலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் விமானம் ஆகியவற்றை உருவாக்கி வருகிறது. ஆனால், தனது படை எண்ணிக்கை, எதிர்கால திட்டங்களை தெரிவிப்பது இல்லை.

இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் அணுஆயுத பலத்தை மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றன. ஆனால், தங்கள் ஆயுத அளவு தொடர்பாக தகவல்களை தெரிவிப்பது இல்லை. வடகொரியா, தனது ராணுவரீதியான அணுஆயுத கட்டமைப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அணு ஆயுதங்களை கண்காணிக்கவும், அணு ஆயுத பரவலை தடுக்கவும் போதிய நடவடிக்கைகள் இல்லாதது கவலை அளிப்பதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here