சீன தலைநகரில் கொத்து கொத்தாக பரவத்தொடங்கிய கொரோனா

சீனாவின் உகான் நகரத்தில் தோன்றி, தலைநகர் பீஜிங் வரை அந்த நாட்டையே உலுக்கிய கொரோனா 5 மாத கால பேராட்டத்துக்கு பிறகு ஏப்ரல் மாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அது சீன மக்களுக்கு நிம்மதியைத்தந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பத்தொடங்கினர். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாட தொடங்கியது. பள்ளிகள் திறக்கப்பட்டு விடும் என மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நிலவின.

ஆனால் பெய்ஜிங் மக்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த சீன மக்களுக்கும் ஏற்பட்டது நிரந்தர நிம்மதி அல்ல, இடைக்கால நிம்மதிதான் என்று சொல்லத்தக்க விதத்தில் அங்கு மறுபடியும் கொரோனா பரவத்தொடங்கி உள்ளது.

தலைநகர் பெய்ஜிங்கில் 56 நாட்களுக்கு பிறகு கடந்த 11ஆம் தேதி முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு மீண்டும் கொரோனா ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது. தினமும் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இது கொரோனாவின் 2ஆவது அலை தாக்குதல் என்று நம்பப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரிசோதனை

இந்த நிலையில் நேற்று காலையுடன் முடிந்த 22 மணி நேரத்தில் பெய்ஜிங்கில் மட்டும் 27 பேருக்கு கொரோனா கொத்து கொத்தாக பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகத்துக்கு கொரோனா வைரசை முதன்முதலில் அறிமுகம் செய்து வெளிப்படுத்தியது வுகான் நகர கடல்வாழ் உயிரின மாமிச சந்தை என்றால், இப்போது பெய்ஜிங்க்கு இரண்டாவது அலை வீச வழி வகுத்திருப்பது அங்குள்ள ஜின்பாடி மொத்த விற்பனை சந்தை.

கொரோனாவின் 2-வது அலையில் பெய்ஜிங்கில் மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 106 என அதிரடியாக உயர்ந்து இருக்கிறது. இந்த தகவலை பெய்ஜிங் நகர செய்தி தொடர்பாளர் சூ ஹெஜியன் உறுதி செய்து இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில்,பெய்ஜிங்கில் கொரோனா தொற்று நோய் நிலைமை மிகவும் கடுமையாக இருக்கிறது. இது எங்கள் அதிகபட்ச முன்னுரிமையாக அமைந்து விட்டது. நாங்கள் அங்கு அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். ஒவ்வொரு நிமிடமும் எங்கள் நடவடிக்கை தொடரும் என்று கவலையுடன் குறிப்பிட்டார்.

பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் தொற்று கொத்து கொத்தாக பரவத்தொடங்கி இருப்பதையொட்டி, பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அது மட்டுமல்ல அந்த நகரை சேர்ந்த 90 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் என்ன வேடிக்கை என்றால், சர்ச்சைக்குரிய ஜின்பாடி மொத்த சந்தைக்கு மே 30ஆம் தேதியில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சென்று வந்திருக்கிறார்கள். அவர்களில் எத்தனைபேருக்கு இப்போது தொற்று பரவி இருக்கிறதோ என்ற கவலை பெய்ஜிங் நகர நிர்வாகத்தை வாட்டி வதைக்கிறது.

அதனால்தான் அந்த சந்தையை சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதிகள் அத்தனையிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. பெய்ஜிங் நகரம் போர்க்கால நிலையில் வைக்கப்பப்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமையன்று அந்த நகர அதிகாரிகள் தெரிவித்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

சீனாவில் நேற்று மொத்தம் 40 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், 32 பேருக்கு உள்ளூர் பரவல் என்றும் 8 பேருக்கு வெளியூர் மூலமான பரவல் என்றும் தகவல்கள் கூறுகின்றன. சீனாவில் நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 221 ஆகும். சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,634 ஆக பதிவாகி இருக்கிறது. சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 377 ஆக உள்ளது.

சீனாவில் கொரோனாவின் 2ஆவது அலை தாக்கத்தொடங்கி இருப்பது அந்த நாட்டு மக்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் உலக நாடுகளுக்கு அது அதிர்ச்சியை தந்துள்ளது. கொரோனாவே, உனக்கு ஒரு முடிவு வராதா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here