கோலாலம்பூர்:
திரெங்கானு, மாராங் மாவட்டச் சிறையில் நேற்று (ஆகஸ்ட் 24) 38 வயதுடைய ஆண் கைதி ஒருவர், சக 3 கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து நேற்று பிற்பகல் 12.31 மணியளவில் போலீசுக்குத் தகவல் கிடைத்ததாக மாராங் மாவட்ட போலிஸ் தலைவர் சுப்ரிண்டண்டன் சோஃபியான் ரெட்சுவான் தெரிவித்தார்.
பழைய கடன் பிரச்சனை மற்றும் பாதிக்கப்பட்ட நபர் மீது சந்தேகநபர்களுக்கு இருந்த அதிருப்தி காரணமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திரெங்கானுவைச் சேர்ந்த 38 வயதுப் பாதிக்கப்பட்ட கைதி, 21 முதல் 35 வயதுக்குட்பட்ட 3 சக கைதிகளால் அறை ஒன்றில் வைத்துச் சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மெர்ச்சங் சுகாதார கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார். பலமான தாக்குதலால் அவரது மண்ணீரல் (Spleen) வெடித்ததே உயிரிழப்பிற்குக் காரணம் எனப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.
பாதிக்கப்பட்டவரின் உடல் மேலதிகப் பிரேதப் பரிசோதனைக்காகச் சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையின் (HSNZ) தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய திராங்கானுவைச் சேர்ந்த 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது குற்றவியல் சட்டப்பிரிவு 302 (கொலை வழக்கு)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
























