மகாதீர் பிரதமர் வேட்பாளரா? நிராகரித்தது கெஅடிலான்

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை பிரதமராக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கெஅடிலான் கட்சி திட்டவட்டமாக அறிவிதுள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மட்டுமே பிரதமர் வேட்பாளர் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் யார் பிரதமர் என்ற சர்ச்சை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜூன் 9ஆம் தேதி கெஅடிலான் தலைமையகத்தில் நடந்த பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் கூட்டத்தில் முதல் பரிந்துரையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராகவும் டத்தோஸ்ரீ முக்ரீஸ் மகாதீர் துணைப் பிரதமராகவும் முன் மொழியப்பட்டனர்.

ஆனால் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சபா வாரிசான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். பின்னர் இரண்டாவது பரிந்துரையில் துன் மகாதீர் பிரதமராகவும் அன்வார் துணைப் பிரதமராகவும் முன்மொழியப் பட்டனர்.

ஆறு மாதங்களுக்கு பிறகு பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் மகாதீர் தன்னை தானே பிரதமர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டார். ஆறு மாதத்திற்கு பிறகு பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன் என்று மகாதீர் அறிவித்தார்.

குறுகிய காலத்திற்கு துன் டாக்டர் மகாதீர் பிரதமராக பதவி வகிப்பதற்கு ஜசெக – அமானா கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துக் கொண்டன. 20 ஆண்டுகளாக அன்வாருடன் நண்பர்களாக இருக்கும் ஜசெக – அமானாவும் தங்கள் விசுவாசத்தை காட்ட இல்லை என்று கெஅடிலான் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதனால், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் யார் பிரதமர் என்ற சர்ச்சை பெரும் பூகம்பமாக வெடித்த நிலையில் நேற்று கெஅடிலான் கட்சியின் உச்சமன்றக் கூட்டம் நடைபெற்றது. வீடியோ காணொலி மூலம் அன்வாருடன் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் உச்சமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் மகாதீரை ஏற்றுக் கொள்ள கெஅடிலான் கட்சி மறுத்துள்ளது. பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் அன்வார் பிரதமர் என்ற முடிவில் உறுதியா இருக்கிறோம் என்று அக்கட்சி அறிவித்தது.

மலேசிய மக்களின் நம்பிக்கையை பெறும் வகையிலும் நாட்டைக் காப்பாற்றவும் மகாதீர் உட்பட பக்காத்தான் ஹராப்பான் கட்சிகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்போம் என்று கெஅடிலான் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here