அடுத்தாண்டு பொதுத் தேர்தல் – கைரி பரிந்துரை

நாட்டின் நிலைத்தன்மை இல்லாத அரசியல் சூழலை சமாளிக்க பொதுத் தேர்தலே சிறந்த வழி என்று அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாலும் நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வருவதாலும் பொதுத் தேர்தலை அடுத்தாண்டு தொடக்கத்தில் நடத்துவது சரியானதாக இருக்கும் என்று அவர் பரிந்துரைத்தார்.

மிகவும் சொற்பப் பொரும்பான்மையில் டான்ஸ்ரீ முஹிடின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் ஆட்சி அமைத்திருக்கின்றது. இது நிச்சயமற்ற அரசியல் சூழலாக தான் பார்க்கப்படுகிறது. இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் நம்பிக்கையில் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது.

நாட்டின் பொருளாதாரம் மீட்சிப் பெற அந்நிய முதலீட்டாளர்கள் மிக அவசியம். பொருளாதார உதவித் திட்டங்களும் பொருளாதார மறுமலர்ச்சித் திட்டங்களும் கொண்டு வரப்பட்டாலும் அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் போனால் நீடித்த பொருளாதார மறுமலர்ச்சியை நம்மால் காண முடியாது.

அரசாங்கம் பெரும்பான்மை ஆதரவை கொண்டிருக்கிறதா என்பதையும் மலேசிய அரசியல் நிலைத்தன்மையுடன் இருக்கிறதா என்பதையும் அந்நிய முதலீட்டாளர்கள் காண விரும்புவார்கள். நாட்டின் அரசியல் நிலைத்தன்மை என்பது மிக முக்கியமானது. எனவே இதற்கு பொதுத் தேர்தலே சிறந்த வழியாகும் என்று கைரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here