லடாக்கில் உள்ள நிம்மு பகுதியில் இன்று ராணுவத்தினரிடையே பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி ‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
லடாக்கில் உள்ள நிம்மு பகுதியில் அவர் ராணுவத்தினருடன் உரையாற்றினார் போது, வீரம், மானம், மாட்சிமைபெற்ற வழிவந்த நன்னடத்தை, தெளிவு – ஆகிய நான்கு குணங்களும் பகையை எதிர்த்து நிற்க, படைக்கு உதவுகின்றன என்று பொருள்தரும் இந்த திருக்குறளை இன்று மேற்கோள்காட்டி பேசியுள்ளார்.
இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே ஜூன் மாத மத்தியில் எல்லைப் பகுதியில் நடந்த மோதலின் பின்பு இந்திய பிரதமர் நரேந்திர மோதி லடாக் ஒன்றிய பிரதேசத்துக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி ராணுவத்தினரிடையே ஆற்றிய உரை பின்வருமாறு:
பலகீனமாக உள்ளவர்களால் அமைதிக்கான முயற்சியை ஒருபோதும் தொடங்க முடியாது. உலகப் போரோ அல்லது அமைதியோ, எப்போதெல்லாம் தேவை எழுகிறதோ அப்போதெல்லாம் நமது வீரர்களின் வெற்றியையும் அமைதியை நோக்கிய நமது முயற்சியையும் இந்த உலகம் கண்டுள்ளது. நாம் மனிதகுலத்தின் மேன்மைக்காக பணியாற்றியுள்ளோம்.
கல்வான் பள்ளத்தாக்கில் உயிர் நீத்த ராணுவத்தினருக்காக மீண்டும் நான் மரியாதை செலுத்துகிறேன். சுயச்சார்பு இந்தியாவுக்கான முயற்சி உங்களின் தியாகத்தால் வலுவடைகிறது.
ராணுவத்தினர் சமீபத்தில் வெளிப்படுத்திய வீரம், இந்த உலகத்திற்கான இந்தியாவின் வலிமை குறித்த செய்தியாக இருந்தது.
நீங்கள் பணி செய்யும் இடத்தின் உயரத்தைக் காட்டிலும் உங்களின் தைரியம் உயர்ந்து நிற்கிறது. உங்கள் தைரியம் மற்றும் வீரம் குறித்துதான் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலித்துக் கொண்டுள்ளது. பாரத மாதாவின் எதிரிகள் உங்களின் தீர்க்கத்தை பார்த்துவிட்டனர்.
ஆக்கிரமிப்புகளுக்கான காலம் முடிந்துவிட்டது. இது வளர்ச்சிக்கான காலம். ஆக்கிரமிப்புகளில் ஈடுபடும் சக்திகள் தோற்று போவதையோ அல்லது திருப்பி அனுப்பப்படுவதையோ வரலாறு கண்டுள்ளது.
எல்லைப் புறத்தில் உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நிதி மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்ட பின்பு லடாக் பகுதியில் பதற்ற நிலையில் நீடிக்கிறது. இந்திய-சீன எல்லையில் நிலவும் சூழலை அறிவதற்கும் அங்கு காவல் பணியில் இருக்கும் பாதுகாப்பு படையினரை உற்சாகப்படுத்துவதற்காகவும் நரேந்திர மோதி அங்கு
பயணம் செய்துள்ளதாக கருதப்படுகிறது.
கல்வான் பள்ளத்தாக்கில் என்ன நடந்தது?
இந்தியா – சீனா எல்லை பிரச்சனை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.
கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியில் சீனா தனது ரோந்து படகுகளின் நடமாட்டத்தை அதிகரித்துள்ளதாக அப்போது செய்திகள் வெளியாகின.
மே மாதத் தொடக்கத்தில் இந்த ஏரியின் அருகே இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்தப் பகுதி லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ளது.
அக்சாய் சீனாவின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் சில கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக இந்தியா கூறியது. அதன்பிறகு அங்கு தனது ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்தது.
ஆனால் சீனாவோ, கல்வான் பள்ளத்தாக்கு அருகே சட்டவிரோதமாக பாதுகாப்பு தொடர்பான கட்டுமானங்களை இந்தியா செய்து வருவதாக குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் தான், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15 அன்று இரவு இருநாட்டு ராணுவங்களுக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் இறந்ததாக இந்திய அரசு தெரிவித்தது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஆணிகள் அடங்கிய கட்டை, மூங்கில் குச்சி, மட்டை போன்றவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஆயுதப் பயன்பாடு எதுவும் நிகழவில்லை என்று இருதரப்பும் தெரிவித்தன.
சீன தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெளிவாகத் தெரியவில்லை. சீன ராணுவத்தினர் 43 பேருக்கு காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என இந்திய ராணுவம் தெரிவிக்கிறது.
ஆனால், இது குறித்த விவரங்கள் எதையும் சீனா வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் மற்றும் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
கல்வான் பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது?
இந்தியாவின் லடாக் பிராந்தியத்திற்கும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் சீனா பகுதிக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கு, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளதால் இந்த பகுதியை இந்தியாவும் சீனாவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதி வருகின்றன.
இந்தப் பள்ளத்தாக்கு வழியாக செல்லும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடுதான் இந்தியா மற்றும் சீனாவை பிரிக்கிறது. இந்த பள்ளத்தாக்கு அமைந்துள்ள அக்சாய் சீனா பகுதி தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த பகுதி தங்களுக்கு சொந்தமானது என இந்தியா உரிமை கோரி வருகிறது.
1962-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தீய – சீனப் போரின்போது, கல்வான் நதி போரின் மையப்பகுதியாக இருந்ததை வைத்தே அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கிறார் சர்வதேச விவகார நிபுணரான எஸ்.டி முனி.