முறையான ஆவணங்கள் இன்றி மலேசியாவில் உள்ள அந்நிய பிரஜைகள் விலங்குகளை போல நடத்தப்படுகின்றனர் என்று வங்காளதேச ஆடவர் முகமட் ரைஹான் கபிர், அல் ஜசீரா எனும் ஊடகத்திற்கு அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சட்டவிரோத குடியேறிகள் விலங்குகளை போல் நடத்தப்பட்டனரா என்பதை ரைஹான் முன் வந்து விளக்கமாக கூற வேண்டும் என்று அரச மலேசிய காவல் படைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் கேட்டு கொண்டார்.
ரைஹான் அவரின் பாதுகாப்பை பற்றி கவலைப் பட வேண்டாம். போலீஸ் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும். ஆனால் அவர் ஓடி ஒளியாமல் முன் வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் கூறினார்.
சட்டவிரோத குடியேறிகளை அதிகாரிகள் விலங்குகளை போல நடத்தினர் என எந்த அடிப்படையில் அவர் கூறினார் என்று தெரிய வேண்டும். ஆனால் அவர் தற்போது தலைமறைவாக இருக்கிறார். அவர் தங்கியிருந்த இடம் உட்பட பல இடங்களில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
இங்கு வந்து நல்ல வருமானத்தை ஈட்டும் அவர்கள் பிறகு ஏன் இவ்வாறு அர்த்தமற்ற தகவல்களை வெளியிடுகின்றனர் என்று தெரியவில்லை என்று ஐஜிபி சொன்னார்.
கடந்த செவ்வாய்க் கிழமை குடிநுழைவுத் துறையினர் ரைஹானை தேடும் பணியை முடுக்கி விட்டது. 25 வயது நிறைந்த அவரை 1959/63 குடிநுழைவு துறை சட்டப் பிரிவின் கீழ் விசாரிக்க தேடப்பட்டு வருகிறார்.