கோலாலம்பூர்:
சிலாங்கூர், செகிஞ்சான் பகுதியில் உள்ள எஸ்.கே சுங்கை லேமான் பள்ளிக்கு அருகே இன்று மாலை நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
இன்று மாலை மூன்று டன் எடையுள்ள லோரி ஒன்றும், டொயோட்டா வயோஸ் (Toyota Vios) காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோதலின் தாக்கத்தால் இரு வாகனங்களிலும் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்த சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வாகனங்களுக்குள் சிக்கியிருந்த நால்வரை மீட்கும் பணி மாலை 3:50 மணி வரை நீடித்தது. இதில் பயணம் செய்த 54 வயது பெண் தலையில் பலத்த காயமடைந்து அரை மயக்க நிலையில் மீட்கப்பட்டார். அவருடன் இருந்த 27 வயது பெண்ணுக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
லோரியை ஓட்டி வந்த 50 வயது நபருக்கு வலது கை மற்றும் காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவருடன் இருந்த 20 வயது இளைஞர் லேசான காயங்களுடன் தப்பினார்.
மீட்கப்பட்ட ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டனர். பின்னர், மேலதிக சிகிச்சைக்காகச் சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
























