இணைய மோசடி – 7 லட்சத்து 48 ஆயிரம் வெள்ளியை இழந்து மக்கள் பரிதவிப்பு

செலாயாங்,

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலக்கட்டத்தில் இணையம், அலைப்பேசி மூலம் மக்களை கவர்ந்த நிறுவனம் ஒன்று, வெளிநாட்டில் முதலீடு செய்வதாக கூறி மக்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி இன்று காணாமல் போய்விட்டதாக பணத்தை இழந்தவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

குறைந்தது 100 வெள்ளியிலிருந்து அதற்கு மேல் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் செலுத்தலாம். அப்பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்படும். அதிலிருந்து கிடைக்கப் பெறும் லாபம், பணம் போட்டவர்களுக்கு பங்கு முறையில் பிரித்துக் கொடுக்கப்படும் என்பது தான் இந்நிறுவனத்தின் மோசடி திட்டம்.

சிலாங்கூர், பினாங்கு, பேராக், கெடா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து மக்கள் இந்நிறுவனத்தில் பணத்தை போட்டவர்கள் இன்று வெறுங் கையோடு நிற்கின்றனர்.

கடந்த மார்ச் மாதம் (நடமாட்டக் கட்டுபாடு ஆணை) காலக் கட்டத்தில் இணையம் மற்றும் அலைப்பேசி மூலம் கிடைக்கப் பெற்ற இந்த தகவல்களைக் கொண்டு மக்கள் அந்நிறுவனத்தை நம்பி பணத்தைச் செலுத்தியதாக பாதிக்கப்பட்டவர்களின் ஒருவரான ரிச்சர்ட் மோசஸ் தெரிவித்தார்.

நாடு முழுமையிலும் 15க்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளன. ஒரு குழுவில் 200 முதல் 300 பேர் இடம் பெறலாம். ஒருவர் மூலம் ஒருவர் என நம் தேவைக்கு ஏற்ப அந்நிறுவனத்தில் பணத்தைச் செலுத்தாலம். அந்நிறுவனத்தின் எஸ்எஸ்எம் பதிவு, வங்கிக் கணக்குகள் ஆகியவற்றுக்கு அங்கீகாரம் இருந்ததாலேயே நம்பி பணத்தை போட்டோம். ஆனால் ஏமாற்றப்படுவோம் என்பது தெரியாமல் போய்விட்டது.

முதல் இரு மாதங்களுக்கு போட்டப் பணத்திற்கு லாபு ஈவாக ஒரு தொகை கொடுக்கப்பட்டது. இம்மாதம் 10ஆம் தேதி ஆகியும் பணம் வரவில்லை. அந்நிறுவனத்தை தொடர்புக் கொண்டால் கிடைக்கவில்லை. அதன் பின்னரே அந்நிறுவனம் பெரும் பண மோசடி செய்திருப்பதை உணர்ந்ததாக அவர் கூறினார்.

இன்று காலை 11.30 மணியளவில் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பத்து கேவ்ஸ், செலாயாங், அம்பாங், கோலாலம்பூர் ஆகிய இடங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களில் 50க்கும் அதிகமானோர் போலீஸ் புகார் செய்தனர். இன்று புகார் அளிக்க வந்தவர்கள் செலுத்திய முதலீட்டு பணம் மட்டுமே 7 லட்சத்து 48 ஆயிரம் வெள்ளியாகும்.

இப்புகாரில் அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். அதுமட்டுமின்றி இந்த புகார் வழி இனிமேல் யாரும் ஏமாறக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம் என்று ரிச்சர்ட் கூறினார்.

சூரியகுமார் முருகன்
படங்கள்: ஆர்.பார்த்திபன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here